Friday 24 December 2010

மன்மதன் அம்பு விமர்சனம்


சில நாட்களுக்கு முன் வளைகுடா இந்திய சாமான்யனுக்கு ஏற்புடைய வகையில் இந்தியாவில் பயணப்படும் உல்லாச சொகுசுக் கப்பல் எதாவது இருக்கிறதா என இணையத்தில் தேடி அலுத்த பின் மும்பை கோவா வழித்தடத்தில் இருப்பதாய் அறிந்து மகிழ்ந்தேன்.அடுத்த வருட விடுமுறையில் திட்டமிடும் நோக்கில் இருந்த மனநிலையை உறுதி கொள்ளச் செய்த விடயம் நேற்று பார்த்த மன்மதன் அம்பு திரைப்படம்.முன்பொரு பதிவில் நான் குறிப்பிட்டு எழுதிய மன்மதன் அம்பு சில எதிர்பார்ப்புகள் பதிவின் பின்புலத்தில் எந்திர வெம்மையில் கமல் கை சுட்டுக்கொள்ளும் வாய்ப்பு அதிகம் உள்ள படைப்போ இது என்ற உள்ளூர பயம் இருந்தது.ஆனால் நடந்தது வேறு.தருக்கப்பிழைகளை முடிந்தமட்டும் குறைத்து,நியாயம் கற்பித்து வெற்றிகரமாகவே அம்பெய்திருப்பதாக தோன்றுகிறது.

அதிகம் தொட்டிராத திரைக்கதையும்,காட்சியமைப்புகளும்,கவனமான பாத்திர தேர்வும் மற்றும் வசனக்கோர்வைகளுமாய் வெகு சுவாரஸ்யமாய் ஆரம்பம் முதல்கொண்டு ஈர்ப்புடன் மெருகேற்றி இருக்கிறார்கள்.கமலின் மாற்று கையாளுதலான நகைச்சுவைப் பிரிவில் இப்படத்தை முற்றிலுமாய் சேர்த்திட இயலாது கடைசி காட்சிகளைத் தவிர என்பது என் கோணத்துப் பார்வை.படம் முழுவதும் வழக்கமான ஆள்மாறாட்ட களிப்பினை ரசிகனுக்குத் தர முயலாமல் வேறு தளத்தினை அறிமுகம் செய்ததில் தனித்து தெரிவது சிறப்பம்சம்.

கதை- ஒரு பெரும் தொழிலதிப மாதவன் கோலோச்சும் நடிகை த்ரிஷாவின் மேலுள்ள காதலின் சந்தேகக் குறியீடுகளை ஆய்ந்திட உளவாளி கமலின் உதவி நாடிட மேற்கொண்டு ஒரளவு நம்பத்தன்மையுடன் நடந்தேறும் சூழ்நிலை சார்ந்த கோர்க்கப்பட்ட நடப்புகளே படம்.

கதாபாத்திரங்களும்,தேர்வும் அதற்கான  நியாயத்தைத் தெளிவுபடுத்துகின்றன.திரைத்துறையின் பின்னணியும்,மேல்தட்டு வர்க்கத்தினரின் கதைக்களனும் படத்தின் ஆடம்பரத்தன்மைக்கு இயல்பாய் அமைவது பொருத்தம்.கதையை த்ரிஷாவை மையப்படுத்தி நகர்த்தி கமலின் இருப்பை சிறிது மட்டுப்படுத்தியது போல் காட்டிருப்பது அவரின் மீதான விமர்சனங்களுக்கு செவிசாய்த்தது போன்ற எண்ணத்தை வெளிக்காட்டுகிறது.கமல் தன்னை முக்கிய பிம்பமாய் காண்பிக்காமல் கதைக்கேற்ப அளவாய் காட்டியிருப்பது இந்த கதைக்கு துறுத்தி நிற்காமல் பொருந்துகிறது.

வித்யாசமான மாற்று முயற்சி ஏதும் இல்லாமல் கமலின் வயதுக்கு பொருந்துகிறது அவர் ஏற்றிருக்கும் வேடம்.நன்றாக செய்திருக்கிறார் என்பது சச்சினின் 49 வது சதத்திற்கு ஒப்பீடு.மென்சோகம்,உளவு,விளக்கம்,இலக்கியம் போன்றவற்றோடும் சில வெகுஅருகாமையான முகக் காட்சியமைப்புகள் அவரின் கண்கள் பேசின விதம் கதைக்கு இயல்பாய் இருக்கிறது.

கதைநாயகி த்ரிஷாவை சங்கீதா பல இடங்களில் தாராளமாய் முந்துகிறார் அவரின் உடற்கூற்றமைப்பைப் போலவே.முக்கியமாய் அவருக்கான வசனங்கள் அவரின் மீதான ஈர்ப்பை உண்டாக்குகிறது.த்ரிஷாவும் நன்றாக நடிக்கக் கற்றுக்கொண்டு விட்டேன் என்பதை பல இடங்களில் உணர்த்துகிறார்.வழக்கமான குழந்தைத்தன உச்சரிப்பில்லாத நாயகியை காணமுடிகிறது.அடுத்த தளத்திற்கு த்ரிஷாவை கொண்டு சென்ற பெருமை இந்த படத்திற்கு கிடைக்கும்.ஒத்திகையுக்தி இதற்கு முக்கிய காரணமாய் இருக்கலாம்.

மாதவனும் பல இடங்களில் மற்றவர்களை முந்தியிருக்கப் பார்க்கிறார்.பல்வேறான உணர்வுகளை சர்வசாதாரணமாய் செய்து காட்டி கவர்ந்திடுகிறார்.மற்றவர்களில் ரமேஷ்,உஷா உதூப்,சங்கீதாவின் மகனாக வரும் சிறுவன்,இலங்கைத்தமிழரின் மனைவியாக வருபவர் கவனத்தை ஈர்க்கிறார்கள்.

கௌதம் மேனனின் ரிச்னெஸ் மற்றும் பேண்டஸி சாகசங்களை எளிதாய் புறந்தள்ள ரவிக்குமாருக்கு நிச்சயம் கமலின் கதையின் களம் வழி செய்திருக்கிறது ரஹ்மான் போன்ற பிம்பங்களின் உதவி இல்லாமலேயே.கமலின் சில ஆள்மாறாட்ட நகைச்சுவைப் படங்களில் நிகழ நேர்ந்த நாடகத்தன்மையை சாமர்த்தியமாய் சொகுசுக் கப்பல், ஐரோப்பிய தளங்களின் மூலம் இல்லாமல் செய்கிறார்.

கமலின் வசனங்கள் மேதாவிலாசத்தை வேண்டிய அளவோடு காண்பிக்கிறது.கவிதை வரிகளில் இருவரிகளை நீக்கி இருந்தால் நன்றாய் இருந்திருக்கும்,கதைக்கு ஒன்றும் அத்தனை அவசியமில்லாதது.நீலவானம் பாடல்யுத்தி வெகுவாய் கவர்ந்தது.மற்றபாடல்கள் கதையோட்டத்தோடு கலந்திருக்கிறது.ஆண்ட்ரியாவின் குரலில் who is d hero-ல் ஒரு வசீகரம் இருக்கிறது.சுரேஷ் கண்ணன் அதுபற்றிய ஒரு பதிவே போட்டிருக்கிறார் என்றால் பாருங்களேன்.ஒளிப்பதிவு- மனுஷ் நந்தன் ரவி.K.சந்திரனின் சீடராம்.குருவின் பெயருக்கு சிறப்பு செய்திருக்கிறார்.

குறைகளே இல்லையா என்றால், பாலுமகேந்திரா கையாளும் படங்களின் கதை போன்ற உணர்வினை தவிர்க்கமுடியவில்லை.ஆர்ப்பரிக்கச் செய்யும் சிறப்பான பாடல்கள்,ஆட்டங்கள் இல்லை.வியக்கச் செய்யும் பெரிய முனைப்பு ஏதும் இல்லை.இது ஒன்றும் பெரிய மைல்கல் முயற்சி இல்லை என்றாலும் அடுத்து எய்யப்போகும் மகா படைப்புக்கான ஒத்திகைக் களனே இந்த அம்பு என்றவகையில் feel good படமாய் இதயத்தை தொடுகிறது இந்த மன்மதன் அம்பு.

7 comments:

Philosophy Prabhakaran said...

நல்லதொரு விமர்சனம்... so படத்தை பார்க்கலாம் என்றே கூறுகிறீர்கள்...

Anonymous said...

NICE MOVIE. KAMAL HAS ONCEAGAIN PROVED THAT HE IS MASTER OF ALL. FAR BETTER THAN USELESS MOVIE :ENDHIRAN"

(kumar-Dubai)

கானகம் said...

கமல் ரசிகனாக உங்கள் விமர்சனத்தை சிறப்பாகவே எழுதியிருக்கிறீர்கள். ஆனால் உண்மை அதற்கு நேர் எதிர்திசையில் அல்லவா இருப்பதாக சாதாரன சினிமா விரும்பிகள் சொல்கிறர்கள்... உங்களின் தமிழ் மெருருகு ஏறி இருக்கிறது.. ஆங்காங்கே சங்கத்தமிழும் எட்டிப்பார்க்கிறது.. வாழ்த்துக்கள்..

sundar said...

Didn't you listen the sounds created by audience crawling in their chairs in the last 45 minutes of the movie...

சர்பத் said...

நன் படித்த வரையில் நீங்கள் ஒருவர் தான் positive விமர்சனம் எழுதி இருக்கிறீர்கள்.

கணேசமூர்த்தி said...

அட அட டா
என்ன ஒரு விமர்சனம்
சீப்பையும் ஒயர் பிரஷ்ஷையும் பக்கத்துல வச்சிக்கிட்டு படிச்சேன். என்னமா புல்லரிக்குது
உங்களுக்கு "விமர்சன விருதகிரி" னு பட்டமே கொடுக்கலாம்
கொஞ்ச நாள் கழிச்சி, எல்லாம் தெளிவான பிறகு ஒரு முறை நீங்களே நீங்க எழுதினத படிச்சி பாருங்க (மறக்காம சீப்பையும் ஒயர் பிரஷ்ஷையும் பக்கத்துல வச்க்குங்க)
அன்புடன்
மூர்த்தி
லா ரோஸ்

கானகம் said...

அண்ணே !!! ஒரு பதிவுக்கும் இன்னொரு பதிவுக்கும் இவ்வளவு இடைவெளி ஆகாதுண்ணே