Friday, 24 December 2010

மன்மதன் அம்பு விமர்சனம்


சில நாட்களுக்கு முன் வளைகுடா இந்திய சாமான்யனுக்கு ஏற்புடைய வகையில் இந்தியாவில் பயணப்படும் உல்லாச சொகுசுக் கப்பல் எதாவது இருக்கிறதா என இணையத்தில் தேடி அலுத்த பின் மும்பை கோவா வழித்தடத்தில் இருப்பதாய் அறிந்து மகிழ்ந்தேன்.அடுத்த வருட விடுமுறையில் திட்டமிடும் நோக்கில் இருந்த மனநிலையை உறுதி கொள்ளச் செய்த விடயம் நேற்று பார்த்த மன்மதன் அம்பு திரைப்படம்.முன்பொரு பதிவில் நான் குறிப்பிட்டு எழுதிய மன்மதன் அம்பு சில எதிர்பார்ப்புகள் பதிவின் பின்புலத்தில் எந்திர வெம்மையில் கமல் கை சுட்டுக்கொள்ளும் வாய்ப்பு அதிகம் உள்ள படைப்போ இது என்ற உள்ளூர பயம் இருந்தது.ஆனால் நடந்தது வேறு.தருக்கப்பிழைகளை முடிந்தமட்டும் குறைத்து,நியாயம் கற்பித்து வெற்றிகரமாகவே அம்பெய்திருப்பதாக தோன்றுகிறது.

அதிகம் தொட்டிராத திரைக்கதையும்,காட்சியமைப்புகளும்,கவனமான பாத்திர தேர்வும் மற்றும் வசனக்கோர்வைகளுமாய் வெகு சுவாரஸ்யமாய் ஆரம்பம் முதல்கொண்டு ஈர்ப்புடன் மெருகேற்றி இருக்கிறார்கள்.கமலின் மாற்று கையாளுதலான நகைச்சுவைப் பிரிவில் இப்படத்தை முற்றிலுமாய் சேர்த்திட இயலாது கடைசி காட்சிகளைத் தவிர என்பது என் கோணத்துப் பார்வை.படம் முழுவதும் வழக்கமான ஆள்மாறாட்ட களிப்பினை ரசிகனுக்குத் தர முயலாமல் வேறு தளத்தினை அறிமுகம் செய்ததில் தனித்து தெரிவது சிறப்பம்சம்.

கதை- ஒரு பெரும் தொழிலதிப மாதவன் கோலோச்சும் நடிகை த்ரிஷாவின் மேலுள்ள காதலின் சந்தேகக் குறியீடுகளை ஆய்ந்திட உளவாளி கமலின் உதவி நாடிட மேற்கொண்டு ஒரளவு நம்பத்தன்மையுடன் நடந்தேறும் சூழ்நிலை சார்ந்த கோர்க்கப்பட்ட நடப்புகளே படம்.

கதாபாத்திரங்களும்,தேர்வும் அதற்கான  நியாயத்தைத் தெளிவுபடுத்துகின்றன.திரைத்துறையின் பின்னணியும்,மேல்தட்டு வர்க்கத்தினரின் கதைக்களனும் படத்தின் ஆடம்பரத்தன்மைக்கு இயல்பாய் அமைவது பொருத்தம்.கதையை த்ரிஷாவை மையப்படுத்தி நகர்த்தி கமலின் இருப்பை சிறிது மட்டுப்படுத்தியது போல் காட்டிருப்பது அவரின் மீதான விமர்சனங்களுக்கு செவிசாய்த்தது போன்ற எண்ணத்தை வெளிக்காட்டுகிறது.கமல் தன்னை முக்கிய பிம்பமாய் காண்பிக்காமல் கதைக்கேற்ப அளவாய் காட்டியிருப்பது இந்த கதைக்கு துறுத்தி நிற்காமல் பொருந்துகிறது.

வித்யாசமான மாற்று முயற்சி ஏதும் இல்லாமல் கமலின் வயதுக்கு பொருந்துகிறது அவர் ஏற்றிருக்கும் வேடம்.நன்றாக செய்திருக்கிறார் என்பது சச்சினின் 49 வது சதத்திற்கு ஒப்பீடு.மென்சோகம்,உளவு,விளக்கம்,இலக்கியம் போன்றவற்றோடும் சில வெகுஅருகாமையான முகக் காட்சியமைப்புகள் அவரின் கண்கள் பேசின விதம் கதைக்கு இயல்பாய் இருக்கிறது.

கதைநாயகி த்ரிஷாவை சங்கீதா பல இடங்களில் தாராளமாய் முந்துகிறார் அவரின் உடற்கூற்றமைப்பைப் போலவே.முக்கியமாய் அவருக்கான வசனங்கள் அவரின் மீதான ஈர்ப்பை உண்டாக்குகிறது.த்ரிஷாவும் நன்றாக நடிக்கக் கற்றுக்கொண்டு விட்டேன் என்பதை பல இடங்களில் உணர்த்துகிறார்.வழக்கமான குழந்தைத்தன உச்சரிப்பில்லாத நாயகியை காணமுடிகிறது.அடுத்த தளத்திற்கு த்ரிஷாவை கொண்டு சென்ற பெருமை இந்த படத்திற்கு கிடைக்கும்.ஒத்திகையுக்தி இதற்கு முக்கிய காரணமாய் இருக்கலாம்.

மாதவனும் பல இடங்களில் மற்றவர்களை முந்தியிருக்கப் பார்க்கிறார்.பல்வேறான உணர்வுகளை சர்வசாதாரணமாய் செய்து காட்டி கவர்ந்திடுகிறார்.மற்றவர்களில் ரமேஷ்,உஷா உதூப்,சங்கீதாவின் மகனாக வரும் சிறுவன்,இலங்கைத்தமிழரின் மனைவியாக வருபவர் கவனத்தை ஈர்க்கிறார்கள்.

கௌதம் மேனனின் ரிச்னெஸ் மற்றும் பேண்டஸி சாகசங்களை எளிதாய் புறந்தள்ள ரவிக்குமாருக்கு நிச்சயம் கமலின் கதையின் களம் வழி செய்திருக்கிறது ரஹ்மான் போன்ற பிம்பங்களின் உதவி இல்லாமலேயே.கமலின் சில ஆள்மாறாட்ட நகைச்சுவைப் படங்களில் நிகழ நேர்ந்த நாடகத்தன்மையை சாமர்த்தியமாய் சொகுசுக் கப்பல், ஐரோப்பிய தளங்களின் மூலம் இல்லாமல் செய்கிறார்.

கமலின் வசனங்கள் மேதாவிலாசத்தை வேண்டிய அளவோடு காண்பிக்கிறது.கவிதை வரிகளில் இருவரிகளை நீக்கி இருந்தால் நன்றாய் இருந்திருக்கும்,கதைக்கு ஒன்றும் அத்தனை அவசியமில்லாதது.நீலவானம் பாடல்யுத்தி வெகுவாய் கவர்ந்தது.மற்றபாடல்கள் கதையோட்டத்தோடு கலந்திருக்கிறது.ஆண்ட்ரியாவின் குரலில் who is d hero-ல் ஒரு வசீகரம் இருக்கிறது.சுரேஷ் கண்ணன் அதுபற்றிய ஒரு பதிவே போட்டிருக்கிறார் என்றால் பாருங்களேன்.ஒளிப்பதிவு- மனுஷ் நந்தன் ரவி.K.சந்திரனின் சீடராம்.குருவின் பெயருக்கு சிறப்பு செய்திருக்கிறார்.

குறைகளே இல்லையா என்றால், பாலுமகேந்திரா கையாளும் படங்களின் கதை போன்ற உணர்வினை தவிர்க்கமுடியவில்லை.ஆர்ப்பரிக்கச் செய்யும் சிறப்பான பாடல்கள்,ஆட்டங்கள் இல்லை.வியக்கச் செய்யும் பெரிய முனைப்பு ஏதும் இல்லை.இது ஒன்றும் பெரிய மைல்கல் முயற்சி இல்லை என்றாலும் அடுத்து எய்யப்போகும் மகா படைப்புக்கான ஒத்திகைக் களனே இந்த அம்பு என்றவகையில் feel good படமாய் இதயத்தை தொடுகிறது இந்த மன்மதன் அம்பு.

Saturday, 6 November 2010

பறக்கத்துடிக்கும் விடலை எழுத்தாளனின் கதை

உதான் (Udaan)


சென்ற பதிவில் மேற்கோளிட்ட ஒரு நல்ல திரைப்படத்தின் பார்வையே இந்த பதிவு.உதான் ஹிந்தி திரைப்படம் பார்த்தபோது தமிழில் ஏன் இதுபோன்ற முயற்சிகள் வருவது மிகக் குறைவாக இருக்கிறது என்ற ஏக்கம் வருவதை தவிர்க்கமுடியவில்லை.ஹிந்தி படங்கள் என்றாலே ஷாருக்,சல்மான் போன்றோர் கிடார் மீட்டிக்கொண்டு ஒரு குறிப்பிட்ட சுரங்களிலேயே காதல்கீதங்களை காலத்திற்கும் பாடிக்கிட்டு இருப்பார்கள் என்ற எண்ணங்கள் மாறத் துவங்கி கொஞ்சம் நாட்களாகிவிட்டன.அதற்கான தார்மீகப் பொறுப்பை ஏற்று வந்துள்ள உதான் (Udaan) கட்டாயம் பார்க்கவேண்டிய நன்மதிப்புப் படங்களின் வரிசையில் மிக முக்கியமான ஒன்று என்பதை அழுத்தமாய் சொல்கிறது.

சிம்லாவில் உள்ள ஒரு தனித்தன்மையான விடுதிப் பாடசாலையில் படிக்கும் பதின்ம வயது நான்கு நண்பர்கள் சுவரேறிக் குதித்துச் சென்று வாலிபப்படத்தைப் பார்க்கப்போய் பிடிபட்டதால் விடுதியிலிருந்து வெளியேற்றப்படுகிறார்கள்.எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஜாம்ஷெட்பூரிலுள்ள தந்தையிடம் வந்துசேரும் ரோஹன் தனது இலக்கியம் கற்கும் விருப்புக்கும் தந்தையின் அதிகப்படியான இராணுவரீதியான கட்டுப்பாடுகளுக்கும் இடையே எதிர்கொள்ளும் எதார்த்த நிகழ்வுகளின் உணர்வுரீதியான,நேர்த்தியான கோர்வையே இந்த உதான். தன்னை சார் என்றழைக்கச் சொல்லும் அளவிற்கு விடுதிப்பாடசாலையை விட அதிக கட்டுப்பாடுகள் கொண்ட தந்தை, எட்டு வருட இடைவெளியில் பிரிந்து சென்றுவிட்ட இரண்டாம்தாரத்தின் மகன் என்னும் புதிய தம்பி உறவு என பாத்திரப்படைப்புகளின் புதுப்பரிமாண அறிமுகம்   கதைக்களனூடே பெரிய ஈர்ப்பை ஏற்படுத்தி விடுகிறது.

எழுத்தாளராகும் தன்விருப்பிற்கு பெரும் முட்டுக்கட்டை இட்டு தனது இரும்புத் தொழிலகத்தில் மதியம்வரை பகுதிநேர பணிக்கும்,பின் பொறியியல் கல்லூரியில் சென்று பயிலவும் ரோஹனை ஆட்படுத்துகிறார் தந்தை.தினமும் காலையில் கட்டாய மெது ஒட்டப்பயிற்சியும் தொடர்ந்து விரைவு ஓட்டப்பந்தயமுமாய் ரோஹனுக்கு ஆட்டம் காட்டுகிறார் தந்தை.ஒருமுறை நேரத்தில் கிளம்பாததால் பள்ளி செல்லும் ஆறு வயது அர்ஜூனையும்,ரோஹனையும் விட்டுவிட்டு காரை எடுத்துச் சென்றுவிடுகிறார்.போற்றிப்பாடும் இயல்பிற்கு முரணாக தந்தையின் சர்வாதிகாரம் படம்முழுக்க ரோஹனை மட்டுமல்லாமல் நம்மையும் நொறுக்குகிறது. பிடிக்காத பாடங்களுக்கும் அன்பை தவிர்த்த ராணுவத்தனமான கண்டிப்புடன் பேணுகிற தந்தைக்கும் நடுவே பறிபோய் கொண்டிருக்கும் இளவயது சுதந்திரத்தைத் திரும்ப பெற்றிடும் ரோஹனின் முயற்சி தான் முழுபடமும்.ஒரு தாய் அல்லது பெண்மணி இல்லாத குடும்பத்தின் சூழலை,பிள்ளைகளுக்கு ஏற்படுகின்ற பாதிப்பை நம்பகத்தன்மைக்கு மிக அருகில் நம்மை அழைத்துச்செல்கிறது இந்தப்படம்.

எட்டுவருடமாய் ஒருமுறையும் தன்னை வந்து பார்த்திராத ஆற்றாமையையும்,ஆறு வயதில் ஒரு தனக்கு ஒரு தம்பி இருப்பதை பதினேழாம் வயதில் தெரியவந்ததை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளும்போதும்,தன்னிடம் தோழமையுடன் ஊக்கமளிக்கும் சித்தப்பாவிடம் கூண்டுச்சிறையிலிருந்து விடுவிக்கக் கோரும்போதும் ரோஹனாக நடித்திருக்கும் ராஜத் பர்மெச்சா இயல்பாய் செய்திருக்கிறார்.தனது இலக்கியத்திறனையும்,நண்பர்களையும் நம்பி மூன்றாம்முறை மணம்புரிந்த சர்வாதிகார தந்தையை ஒரு குத்துவிட்டு பின்னர் ஆறுவயது தம்பியுடன் வீட்டைவிட்டு ரோஹன் வெளியேறுவதோடு முடிகின்ற படத்தில் அவர்களின் வாழ்க்கை என்னாகுமோ என்ற நமது பதட்டம் படத்தின் முக்கிய ஜீவன்,வெற்றி.

எடுத்துக் கொண்ட கதையில் செய்நேர்த்தியும், சீரான கதையோட்டமும் அழகாய் வெளிப்படுத்தி இருக்கிறார் அறிமுக இயக்குநர் விக்ரமாதித்ய மோத்வனெ. அனுராக் கேஷ்யாப்பின் பட்டறையிருந்து வந்துள்ள இவர் மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்துகிறார்.

குறிப்பாக ரோஹன் ரயிலில் ஜாம்ஷெட்பூர் வந்திறங்கி வீடு சேர்ந்து அடுத்தநாள் காலையில் ஊர்ப்பெயரை காண்பிக்கிறார்.steel city என்பதை பார்வையாளர்கள் முன்னமே இனம் கண்டுவிடுவார்கள் என்ற நம்பிக்கையாக இருக்கலாம்.ரோஹனின் தந்தை காரில் எப்போதும் ஒரு பாதுகாப்புத் தலைக்கவசம்(safety Helmet - hard hat) வைத்திருப்பார்.ரோஹன் முதல்நாள் தனது தொழிற்சாலையில் வேலைக்கு பயிற்சி எடுக்க மேலாளருடன் அனுப்பும்போதும் ஹெல்மெட்டைக் கொடுத்து வாழ்த்தி அனுப்புவது என சிறுவிஷயங்களிலும் இயக்குநர் நல்ல கவனத்துடன் கையாண்டிருக்கிறார்.இது பாதுகாப்பு சார்ந்த தொழில்முனைப்பில் இருக்கும் என் கண்ணுக்குதான் தென்படுகிறதா என்பது வேறுவிஷயம்.

இலக்கியம் படித்தால் சோறு கிடைக்காது என்பது ரோஹனின் தந்தையின் கருத்து மட்டுமல்ல பெரும்பான்மையான இந்திய பெற்றோரின் கருத்து.இந்த பாதிப்பில்தான் ஏதோவொரு வகையில் இலக்கியத்தின்பால் ஈர்ப்பு கொண்ட ஆனால் வேறுதுறைப்பாடங்களை படித்த பெரும்பான்மையானோர் இணைய வலைப்பதிவர்களாக வலம்வருகிறார்களோ என்று ஏனோ ஐயங்கொள்ளத் தோன்றுகிறது.

3 இடியட் வணிகரீதியான கலவையாக உருப்பெற்றப்படம் என்பது என் கருத்து.அதுபோன்ற ஒரு கோட்பாட்டை இந்தபடம் எந்தவித வணிகரீதியிலான கலப்பின்றி தந்திருக்கிறது.கேன்ஸ் திரைப்பட விழாவிலும்,தோஹா திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்ட பெருமைக்குரியது இந்த படைப்பு.விடலைப் பருவத்தின் காட்சியமைப்புகளை நம்தமிழ் இயக்குநர்கள் கையாளும் விதமே தனி.சோகக்கதை அது. சமீபகால ஹிந்தி சினிமாக்களின் தரத்தைக் காணுகையில் தமிழ் சினிமா பயணம் எதைநோக்கி சென்று கொண்டிருக்கிறது என்கின்ற பயம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.மிஷ்கினின் நந்தலாலா பயம்தீர்க்க ஆதரவு தருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.2010 ல் வந்த இந்தியப்படங்களில் ஒரு முக்கிய இடத்தைப்பெறும் இப்படத்தை வாய்ப்பு கிடைத்தால் கட்டாயம் பாருங்கள்.

Saturday, 30 October 2010

தவறவிட்ட திரைப்பட விழா வாய்ப்பு

சென்னை ஃபில்ம் சேம்பரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சர்வதேச திரைப்பட விழா சமயத்தில் என் வாய்ப்பு பறிபோன கதை வேறுதளத்தைப் பற்றியது.இந்த தளம் இடம் என்ற அர்த்தத்திற்குரியது.சென்னையைப் பிரிந்து இருப்பதால் அங்கு நடைபெறும் விழாவில் கலந்து கொள்வது இயலாமையாகிப் போனது.மறதியும் சோம்பேறித்தனமும் குறுகிய வட்டமுமே இந்த வாய்ப்பைத் தவறவிடக் காரணம்.இந்த கட்டேற்றம் கத்தார் தோஹாவில் இன்றோடு நடந்துமுடிந்த சர்வதேசத் திரைப்பட விழாவைப்(Doha Tribeca Film Festival) பற்றிய மையம் கொண்டது.

இரண்டு மாதங்களுக்கு முன் ஒரு நண்பரின் வழக்கமாய் திருப்பிவிடும் சுபாவ இமெயில் மூலம் இதுபற்றி அறிந்தேன்.பிறகு அதன் அதிகாரபூர்வ இணையதளத்தில் விவரங்கள் தேடியதில் அவர்களுக்கு சேவைப்பணிக்கு விண்ணப்பிக்க ஆட்களும் தேவை என்பது தெரிந்தது.இதிலெல்லாம் கலந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் இதுவரை பெரியதாய் இல்லாமல் தான் இருந்தது.ஆனால் சில நண்பர்களின் பரிந்துரைகளினாலும்,சாரு நிவேதிதா,எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோர் என் மனத்தில் உண்டாக்கிய தாக்கத்தினாலும் சர்வதேசத் திரைப்படங்கள் என்னுள் ஒரு உந்துதலை உண்டாக்கி இருந்தது.

திரையிடப்போகும் படங்களின் பட்டியலை அப்போதைய சமயத்தில் பார்த்தபின் ஒரே அரபியத் திரையிடல்கள் வாசம் என்னை பயமுறுத்தியது.அதனால் விண்ணப்பிக்க தயங்கி பின்வாங்கிவிட்டேன்.விண்ணப்பித்து இருந்தாலும் கிடைத்திருக்குமா என்பது வேறு விஷயம்.விண்ணப்பித்த ஆயிரமவர்களில் ஒரு நூறுபேரை மட்டுமே தேர்வு செய்த்ததும்,அதில் பெரும்பான்மையானவர்கள் அரபிக் பேசுபவர்கள் என்பதும் காலம் கடந்தபின் வந்துசேர்ந்த புரிதல்.அதோடு இந்த விழாவைப் பற்றி மறந்துவிட்டேன்.

இன்றுதான் இவ்விழாவினைப் பற்றிய தொடர்விவரங்கள் கிடைக்க,வாய்ப்பு தவறவிட்டதன் உணர்வு உறுத்தியது.கென்ஸ் விழாவில் கலந்து கொண்ட பல சர்வதேசத் திரைப்படங்களும் கடைசிநேர வரிசையில் சேர்ந்து கொண்டன.அவற்றில் முக்கிய படங்களாய் என் புரிதலுக்கானவை:

பிரேவ் ஹார்ட், பேர்ல் ஹார்பர் படங்களின் திரைக்கதாசிரியர் ரேண்டல் வாலஸ்ஸின் “Secretariat"

கேன்ஸில் சிறந்த இயக்குநர் விருது பெற்ற ஜூலியன் ஸ்சென்பெலின் "Miral" - இதில் ப்ரைய்டா பிண்டோ ஸ்லம்டாக் மில்லினர் நாயகி நாயகியாக நடித்தது.

வேர்ல்ட் பனோரமா குழுவில் இடம்பெற்ற ஒரே இந்தியத் திரைப்படமான “Udaan” உதான் - விக்ரமாதித்ய மோத்வனெ இயக்கத்திலும், மற்றும் அனுராக் கேஸ்யாப்பின் திரைக்கதையிலும் வந்த படம்.

1945 க்கும் 1962 க்கும் இடைப்பட்ட காலங்களில் அல்ஜீரியாவில் நடந்த கொடும்கொலைகளில் தப்பித்து பிரான்ஸில் தஞ்சம் புகுந்த மூன்று சகோதரர்களின் கதையமைப்பைக் கொண்ட ''Outside the Law"

மற்றும் கென்ய கிராமத்தின் 84 வயது விவசாயியின் முதியோர் கல்வி ஆசை பற்றிய   "The First Grader" படங்கள்.

இந்த விழாவில் ராம்கோபால் வர்மாவின் ரக்த சரித்ராவும் சிறப்புத் திரையிடலாக திரையிடப்பட்டது.விழாவில் ஒருநாள் பேமிலி டேயாக அறிவித்து இலவசமாய் இரண்டு நல்லபடங்களையும் அழகான திறந்தவெளி அரங்கில் காண்பித்தார்கள் என்பது நண்பரின் மூலம் கடைசியாக வந்த தகவல்.மீரா நாயர்,ப்ரைய்டா பின்டோ,சல்மா ஹெயக் மற்றும் மல்லிகா ஷெராவத் ஆகியோரும் கலந்து கொண்டார்களாம்.இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் நான் தவறவிட்டதாய் சொன்ன வாய்ப்பு.அடுத்த வருடத்தில் வாய்ப்பு கிடைத்தால் தவறவிடக்கூடாது என்று எங்கோ எழுதின ஞாபகம்(இங்கே தான்.. வேற எங்கேயும் எழுதறதில்லை).தோஹா நண்பர்கள் கூட்டு சேரலாம்.அதுவரை என்ன பண்றது..இந்த படங்களை  சில பல உபயங்களின் மூலம் முடிந்தால் பார்த்துவிட்டு பதிவிட வேண்டியது தான்..

நன்றி: DTFF - http://www.dohafilminstitute.com/

செந்தில்குமார்.