Wednesday 6 October 2010

உலாவலின் இன்பம்

மடிக்கணினியில் மூழ்கிருந்த ஒரு வழக்கமான மதிய பொழுதில் பள்ளி விட்டு வந்த நான்காம் வகுப்பு படிக்கும் என் மகள் மிக சாதாரணமாய் கேட்ட ஒரு கேள்வி என்னை துணுக்குறச் செய்தது.அப்பா, நாம் எப்போ ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுலா போவோம்.? இதுவே என்னை துணுக்குறச் செய்த கேள்வி.வளைகுடா நாடொன்றில் வசித்தாலும் பரந்துவிரியா இந்திய மனம் என்பதாலோ என்னவோ அந்த வியப்பு.அவளின் வகுப்புத்தோழி இந்த கோடை விடுமுறையில் அங்கு சென்றுவந்ததாய் சொன்னாள்.

நம்மில் பெரும்பகுதியினர் சுற்றுலா செல்வதற்கு பெரியதாய் நாட்டமும் முயற்சியும் மேற்கொள்வதில்லை.சிறு பயண தூரத்திலும் ஒரு குழுவாய், நண்பர்களுடன் சென்று வருவதில் கி்டைக்கும் மகிழ்வும் சுகமே.


சமீபத்திய எங்களின் விடுமுறையின் போது விஜயவாடாவில் பணியிலிருக்கும் என் மனைவியின் சகோதரனைக் காணச்சென்றோம்.நான்குநாட்கள் அங்கு கழிக்க எத்தனித்திருந்தோம்.விஜயவாடாவில் என்ன பெரியதாய் இருந்துவிடப்போகிறது சுற்றிப்பார்க்க என்ற அவதானிப்பில் நான் இருந்தேன்.அங்கு வழக்கமான சுற்றுலாத்தளங்களான கனகதுர்கா அம்மன் கோயில்,மங்களகிரியை சுற்றிவிட்டு நகரத்தைவிட்டு 16 கி.மீ.தொலைவில் இருந்த உண்டவள்ளி குகைக்கோவிலுக்கு சென்றோம்.

 அங்கு எனக்கு பல ஆச்சர்யங்கள் காத்திருந்தது.இந்த நான்காம் நூற்றாண்டு பழைமையான அனந்த பத்மநாபஸ்வாமி குகைக்கோயிலை இந்திய தொல்பொருள் அகழ்வாராய்ச்சி நிறுவனம் பராமரித்து வருகிறது.கூட்டம் அதிகமொன்றும் இல்லாத அந்த பகல்பொழுதில் ஜெர்மெனியை சேர்ந்த அந்நியதேசத்துப் பெண் தான் என்னை ஆச்சரியம் கொள்ளச்செய்தாள்.எங்கள் குழுவுக்கு பின்னால் அவர்கள் வந்து கொண்டிருந்தார்கள்.சிறிதுநேர குகைக்கோயிலின் கண்டுகளிப்பிற்கு பிறகு மெதுவாய் கொஞ்சம் தயக்கத்துடனே(எப்பவுமே அப்படித்தான்..,) அவளிடம் பேச்சு கொடுத்தேன்.சிறிது கலந்துரையாடலுக்கு பின் பல தகவல்களை பரிமாற்றம் செய்தாள்.ஜெர்மெனியில் இருந்து 13 வயது மகள் மற்றும் 8 வயது மகனுடன் தனியாக இந்தியா சுற்றிப் பார்க்க வந்திருக்கிறாள்.அதுவும் ஐந்து வாரங்கள் இந்தியா முழுதும் சுற்றும் திட்டமிடலுடன்.


வட இந்தியாவில் இரண்டு வாரங்கள் பல இடங்களில் சுற்றிவிட்டு இங்கு வந்திருப்பதாக சொன்னாள்.அவளின் கணவனுக்கு விடுப்பு கிடைக்காததால் கடைசி இரண்டு வாரங்கள் அவர்களுடன் தமிழக மற்றும் கேரள பயணத்தில் சேர்ந்து கொள்வதாக திட்டமாம்.இதெல்லாம் நாமே செய்ய மாட்டோம்,எங்கே நமது தேசத்துப்பெண்கள் தனியாய் பிள்ளைகளுடன்.மலைப்பாக இருந்தது.விஜயவாடாவில் எங்கோ ஒரு மூலையில் இருந்த இந்த இடத்தை அவர்கள் அணுகியது எப்படி என்ற வியப்பும் என்னை உலுக்கியது. இணையத்தில் இடங்களைப் பற்றி பல தகவல்களுடன் மிகுந்த முன்னேற்பாட்டுடன் வந்திருந்தது தெரிந்தது.மீதமுள்ள இந்திய கண்டுகளிப்பு இனிதாய் அமைய  அவர்களை வாழ்த்தி விட்டு நானும் இனி இதுபோன்ற முனைப்பை செயலாக்க வேண்டும் என்ற நினைப்பை நிலைநிறுத்தினேன் என்னுள்.

 
குகைக்கோயிலில்  ஒய்யாரமாய் சாய்ந்து படுத்தபடி எழுந்தருளியுள்ள அனந்த பத்மநாபஸ்வாமி சிலை ஒரே கல்லில் செதுக்கியது

ஆஸ்திரேலியா,லண்டன்,ஐரோப்பிய நாடுகளுக்கு போகாவிட்டாலும் பாரததேசத்தின் எல்லைகளையாவது அளந்துவிட முடிவுசெய்தேன்.
மணற்குன்றுகளுக்கு மத்தியிலும் ஒரு இனிமையான உலாவலை ஒரு நண்பரின் பெற்றோர் இங்கு வந்திருந்தபோது முழுதாய் உணரமுடிந்தது.

எந்திரன் போன்ற படங்களுக்கு செலவு (சமகாலத்தின் பதிவு..,)செய்யும் 500 ரூபாயில் கூட ஒரு இனிய உலாவலை உங்கள் அருகாமையிலேயே காணலாம்.சென்னைக்கு மிக அருகில் கூட பல சுற்றுலாத்தளங்கள் இன்னும் பெரிதாய் சீண்டப்படாமல் உள்ளன.இதுபற்றிய ஒரு நல்ல இணையதளம் சமீபத்தில் காணக்கிடைத்தது.உங்கள் பார்வைக்கும்

http://www.chennaitrekkers.org/.

இனிய உலாவிற்கு வாழ்த்துக்களுடன்..


2 comments:

கானகம் said...

//வளைகுடா நாடொன்றில் வசித்தாலும் பரந்துவிரியா இந்திய மனம் என்பதாலோ என்னவோ//

உண்மை.

//நம்மில் பெரும்பகுதியினர் சுற்றுலா செல்வதற்கு பெரியதாய் நாட்டமும் முயற்சியும் மேற்கொள்வதில்லை.சிறு பயண தூரத்திலும் ஒரு குழுவாய், நண்பர்களுடன் சென்று வருவதில் கி்டைக்கும் மகிழ்வும் சுகமே.//

இதுவும் உண்மை.

நமது எண்ணங்களை விரிவாக்கவேண்டும். அதற்கு ஒரே வழி பயணங்கள் செல்வதும், அதையும் கூட்டமாகச் செல்வதுமே. குற்றாலம் போன்ற இயற்கை அன்னையை தரிசிக்கும் இடம்கூட நமக்கு டாஸ்மாக்கின் திறந்த வெளி பாராய் தெரிவது நமது கலாச்சாரச் சீரழிவின் அடையாளமே.

நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.

கணேசமூர்த்தி said...

செந்தில்
அருமையான பதிவு.
புதிய தளத்தை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.
supposed to be ur first essay. Ok no problem. As per me Your actual account starts from this only..
நேசமுடன்,
மூர்த்தி
லா ரோஸ்