Sunday 3 October 2010

எந்திரன் - என் பார்வையில்

எந்திரன்



ஒரு ரோபோவுக்கு ஆறாம் அறிவை புகுத்திய பின் அதற்கு காதல் வந்தால் என்ன ஆகும் என்பதே பிரமாண்ட எந்திரனின் ஒன்லைன்.Sci-Fi னில் ஷங்கர் புகுந்து விளையாடப்போகிறார் என்று எதிர்பார்த்தால்.,ரோபோவுக்கு காதல் முளைக்கவிட்டதோடு தன்வேலை முடிந்துவிட்டதாய் நினைத்து இயக்குனர் தன் யோசிப்பை நிறுத்திக் கொண்டு விட்டது மிகப் பெரிய சோகம்.மிகுந்த ஆர்ப்பாட்டங்களினூடே வந்து எங்களின் பேராசையை மீண்டும் நிராசையாக்கிய பெருமைக்குரியவராகிறார் ஷங்கர்.பல கோடி செலவு செய்தும் உலக அரங்கில் தமிழ் சினிமாவை முன்னிறுத்தும் முயற்சியில் மிகுந்த தோல்வியும் ஏமாற்றமுமே மிஞ்சுகிறது.

நிறைகளாய் :  ரோபோவை வைத்து வரிசையாய் மெல்லிய நகைச்சுவை உணர்வுகளுடன் கூடிய காட்சிகளைக் கோர்த்து பிரமாண்டமாய் பெரிய பூந்தோரணங்களை கட்டி அலங்கரித்து இருக்கிறார்கள்.பாடல்கள் வழக்கத்தை விட அழகாய் இருக்கிறது,முக்கியமாய் அரிமா அரிமா,காதல் அணுக்கள்.சிட்டி ரோபோ முதல் பாதியில் நம்மை ஈர்த்து பின்பாதியில் ரொம்ப வசீகரித்து கட்டிப்போடுகிறார்.கடைசி அரைமணி நேர கிராபிக்ஸ் கலக்கல் தமிழ் சினிமாவில் புதுசு.ஐஸ்வர்யாராய் கதைக்கு அழகூட்டியும் மிகத்தேவையாயும் இருக்கிறார்.ரோபோவுக்கே காதல் வருமென்றால் சும்மாவா.,சாபுசிரிலின் கைவண்ணம்,ரத்னவேலின் அசர வைக்கும் கேமராப் பார்வை முத்தாய்ப்பாய் ஷங்கர் மற்றும் ரஜினியின் உழைப்பு.
வழக்கமாய் கமல்,விக்ரம்,சூர்யா ஆகியோர் ஏற்றுச் செய்யும் மெனக்கெடலை முதன்முறையாய் இந்தமுறை ரஜினி ஏற்று மிக உழைத்திருக்கிறார்,உண்மையிலேயே.25 கோடியின் பலனோ என்னவோ..ரஹ்மான் இன்னும் கொஞ்சம் நன்றாக செய்திருக்கலாம்.

10 வருட கனவு, இரண்டரை வருட உழைப்பைத் தாங்கி வரும் படத்திற்கு நிறைய மெனக்கெடல்களை ஷங்கர் செய்திருக்க வேண்டும்.ஆனால் புதியதாய் பெரியதாய்(ஷங்கர் என்பதால்) நாம் கேட்டறியாத,புரிந்து கொள்ள சிறிது கடினமான அல்லது செயற்கை அறிவுசார் விஷயங்கள் பெரிதாய் ஒன்றும் இல்லாதது வருத்தம்.அறிவியல் புனைக்கதை பாமர ரசிகனைச் சேர நினைத்ததின் விளைவோ என்னவோ.மைல்கல்லாக நினைத்தது கால்புள்ளியாய் கரைந்திருக்கிறது.படம் முழுதும் எதைஎதையோ உடைத்துக் கொண்டே இருக்கிறார்கள்,LCD TV, ஹெலிகாப்டர்,கார்,ரயில் இருக்கை,கண்ணாடி முதற்கொண்டு.அழிப்பில் காட்டிய ரிச்னெஸ் முனைப்பை சுய கதை ஆக்கத்திலும் கொஞ்சம் காட்டியிருக்கலாம் என்ற ஆதங்கம் உண்டாவதை தவிர்க்கமுடியவில்லை.

செக்குமாடாய் திரும்ப திரும்ப காதலையே சுற்றிச்சுற்றி வரும் தமிழ்சினிமாவின் அவலநிலை ரோபோவை வைத்து அறிவியல் புனைக்கதையும் களனும் செய்ய அமைந்தாலும் விடாது போலும்.இதனாலேயே தமிழ்சினிமாவின் உள்வட்டம் எவ்வளவு சுருங்கியிருக்கிறது என்பது அப்பட்டமாய் தெரிகிறது.

இரண்டு வருட உழைப்பை தாங்கி சமீபத்தில் வெளிவந்த தசாவதாரம்,கந்தசாமி,ராவணன் மற்றும் எந்திரன் அனைத்திலும் அடித்தளக் கதையும் படமும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாமல் அம்புலிமாமா,விட்டாலாச்சாரியா படக்கதைகளின் பாதிப்பை மட்டுமே பதித்துவிட்டு சென்றன.சுயமாய் புதியகதையும் களனும் இல்லாததே காரணம்.ஓர் ஒப்பீட்டில் தசாவதாரமும் எந்திரனும் சில விஷயங்களில் ஒரே கோட்டில் நிற்கின்றன.அம்புலிமாமா கதை ரவிக்குமாரின் பார்வையிலும் ஷங்கரின் பார்வையிலும் இரு வேறு படங்களாய் மற்றும் கமலின் பத்து அவதாரம்,ரஜினியின் மூன்றுமுகம்.அதிலும் விஞ்ஞானி வசீகரன் வசீகரமாய் இல்லை.ஒட்டுமீசை பல இடங்களில் பல்லிலிக்கிறது.இவ்வளவு செலவு செய்தவர்கள் ஒப்பனையில் கவனித்திருக்கலாம்.


ரெட்டிப்,டைம் ஆப் இந்தியா போன்றவையும் ரஜினியை மழலைகளை நாம் பாராட்டி,சீராட்டி ஊக்குவிப்பது போல விமர்சனம் எழுதியது என்னை இந்த முதல் பதிவை எழுதத்தூண்டியது.உலகளவில் வியாபாரம் செய்யும் படத்திற்கு தரத்தினை கூட்ட சிறிதேனும் முயன்றிருக்கலாம்.ஆதித்யா,சுட்டி சேனல்களுக்கு பால் வார்த்த நன்றியையும்,என் குழந்தைகளை மகிழ்வித்த நன்றியையும் மட்டுமே உரித்தாக்குகிறேன்.இந்த சமயத்தில்  தமிழ் சினிமாவை உலக அரங்கில் முன்னிறுத்தக்கூடிய இயக்குனராய்  பாலாவை தைரியமாக பாராட்ட என்மனம் விழைகிறது.

எந்திரன் -- தசாவதாரத்தின் கால் புள்ளி(டாட்.- வசீயின் பாணியில்)
                   மற்றும் உலக அரங்கில் தமிழ்சினிமாவை முன்னிறுத்தும் முயற்சியில் தோல்வி...

4 comments:

Unknown said...

முதல் பதிவிற்கு வாழ்த்துக்கள்.
ரொம்ப நாசுக்கா வலிக்காம அடிச்சிருக்கிங்க.

கானகம் said...

வெல்கம் டு பிளாக் வேர்ல்ட்..

ரஜினி படம் எல்லாம் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது என்பதி நீங்கள் அறிந்திருக்கவில்லை என நினைக்கிறேன்...

வாழ்த்துக்கள்

கணேசமூர்த்தி said...

செந்தில்
அருமையான நடுநிலையான தன்னிகரற்ற ஒரே விமர்சனம்
படம் எடுக்கிற அவசரத்துல நிறைய விஷயத்தை ஷங்கரும் சுஜாதாவும் மறந்துட்டாங்க போலிருக்கு. நல்ல வேளை நீங்க அத எல்லாம் கரெக்டா கண்டுபுடிச்சிட்டீங்க. எதுக்கும் ஒரு முறை நேரா போய் சொல்லிட்டு வந்துருங்க‌
அடுத்த படமாவது ஒழுங்கா எடுக்கட்டும்.
ஓர் ஒப்பீட்டில் தசாவதாரமும் எந்திரனும் சில விஷயங்களில் ஒரே கோட்டில் நிற்கின்றன.தத்துவம் நெ:3102010

எந்திரன் -- தசாவதாரத்தின் கால் புள்ளி(டாட்.- வசீயின் பாணியில்). தத்துவம் நெ:3102011.
அது எப்படி ஒரே பதிவுல அதுவும் மொத பதிவுலேயே தத்துவ உலகத்துல ஒரு நெரந்திர இடத்த புடிச்சிட்டீங்க.
என்ன தான் மறச்சி மறச்சி எழுதினாலும் கமல் ரசிகர்னு நல்லாவே தெரியுது.
புகை ரொம்ப ஜாஸ்தியா இருக்கு. பார்த்து, உடம்புக்கு ஒத்துக்காது
வாழ்த்துக்களுடன்,
மூர்த்தி
லா ரோஸ்

Saravanan said...

Good review!