Saturday 6 November 2010

பறக்கத்துடிக்கும் விடலை எழுத்தாளனின் கதை

உதான் (Udaan)


சென்ற பதிவில் மேற்கோளிட்ட ஒரு நல்ல திரைப்படத்தின் பார்வையே இந்த பதிவு.உதான் ஹிந்தி திரைப்படம் பார்த்தபோது தமிழில் ஏன் இதுபோன்ற முயற்சிகள் வருவது மிகக் குறைவாக இருக்கிறது என்ற ஏக்கம் வருவதை தவிர்க்கமுடியவில்லை.ஹிந்தி படங்கள் என்றாலே ஷாருக்,சல்மான் போன்றோர் கிடார் மீட்டிக்கொண்டு ஒரு குறிப்பிட்ட சுரங்களிலேயே காதல்கீதங்களை காலத்திற்கும் பாடிக்கிட்டு இருப்பார்கள் என்ற எண்ணங்கள் மாறத் துவங்கி கொஞ்சம் நாட்களாகிவிட்டன.அதற்கான தார்மீகப் பொறுப்பை ஏற்று வந்துள்ள உதான் (Udaan) கட்டாயம் பார்க்கவேண்டிய நன்மதிப்புப் படங்களின் வரிசையில் மிக முக்கியமான ஒன்று என்பதை அழுத்தமாய் சொல்கிறது.

சிம்லாவில் உள்ள ஒரு தனித்தன்மையான விடுதிப் பாடசாலையில் படிக்கும் பதின்ம வயது நான்கு நண்பர்கள் சுவரேறிக் குதித்துச் சென்று வாலிபப்படத்தைப் பார்க்கப்போய் பிடிபட்டதால் விடுதியிலிருந்து வெளியேற்றப்படுகிறார்கள்.எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஜாம்ஷெட்பூரிலுள்ள தந்தையிடம் வந்துசேரும் ரோஹன் தனது இலக்கியம் கற்கும் விருப்புக்கும் தந்தையின் அதிகப்படியான இராணுவரீதியான கட்டுப்பாடுகளுக்கும் இடையே எதிர்கொள்ளும் எதார்த்த நிகழ்வுகளின் உணர்வுரீதியான,நேர்த்தியான கோர்வையே இந்த உதான். தன்னை சார் என்றழைக்கச் சொல்லும் அளவிற்கு விடுதிப்பாடசாலையை விட அதிக கட்டுப்பாடுகள் கொண்ட தந்தை, எட்டு வருட இடைவெளியில் பிரிந்து சென்றுவிட்ட இரண்டாம்தாரத்தின் மகன் என்னும் புதிய தம்பி உறவு என பாத்திரப்படைப்புகளின் புதுப்பரிமாண அறிமுகம்   கதைக்களனூடே பெரிய ஈர்ப்பை ஏற்படுத்தி விடுகிறது.

எழுத்தாளராகும் தன்விருப்பிற்கு பெரும் முட்டுக்கட்டை இட்டு தனது இரும்புத் தொழிலகத்தில் மதியம்வரை பகுதிநேர பணிக்கும்,பின் பொறியியல் கல்லூரியில் சென்று பயிலவும் ரோஹனை ஆட்படுத்துகிறார் தந்தை.தினமும் காலையில் கட்டாய மெது ஒட்டப்பயிற்சியும் தொடர்ந்து விரைவு ஓட்டப்பந்தயமுமாய் ரோஹனுக்கு ஆட்டம் காட்டுகிறார் தந்தை.ஒருமுறை நேரத்தில் கிளம்பாததால் பள்ளி செல்லும் ஆறு வயது அர்ஜூனையும்,ரோஹனையும் விட்டுவிட்டு காரை எடுத்துச் சென்றுவிடுகிறார்.போற்றிப்பாடும் இயல்பிற்கு முரணாக தந்தையின் சர்வாதிகாரம் படம்முழுக்க ரோஹனை மட்டுமல்லாமல் நம்மையும் நொறுக்குகிறது. பிடிக்காத பாடங்களுக்கும் அன்பை தவிர்த்த ராணுவத்தனமான கண்டிப்புடன் பேணுகிற தந்தைக்கும் நடுவே பறிபோய் கொண்டிருக்கும் இளவயது சுதந்திரத்தைத் திரும்ப பெற்றிடும் ரோஹனின் முயற்சி தான் முழுபடமும்.ஒரு தாய் அல்லது பெண்மணி இல்லாத குடும்பத்தின் சூழலை,பிள்ளைகளுக்கு ஏற்படுகின்ற பாதிப்பை நம்பகத்தன்மைக்கு மிக அருகில் நம்மை அழைத்துச்செல்கிறது இந்தப்படம்.

எட்டுவருடமாய் ஒருமுறையும் தன்னை வந்து பார்த்திராத ஆற்றாமையையும்,ஆறு வயதில் ஒரு தனக்கு ஒரு தம்பி இருப்பதை பதினேழாம் வயதில் தெரியவந்ததை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளும்போதும்,தன்னிடம் தோழமையுடன் ஊக்கமளிக்கும் சித்தப்பாவிடம் கூண்டுச்சிறையிலிருந்து விடுவிக்கக் கோரும்போதும் ரோஹனாக நடித்திருக்கும் ராஜத் பர்மெச்சா இயல்பாய் செய்திருக்கிறார்.தனது இலக்கியத்திறனையும்,நண்பர்களையும் நம்பி மூன்றாம்முறை மணம்புரிந்த சர்வாதிகார தந்தையை ஒரு குத்துவிட்டு பின்னர் ஆறுவயது தம்பியுடன் வீட்டைவிட்டு ரோஹன் வெளியேறுவதோடு முடிகின்ற படத்தில் அவர்களின் வாழ்க்கை என்னாகுமோ என்ற நமது பதட்டம் படத்தின் முக்கிய ஜீவன்,வெற்றி.

எடுத்துக் கொண்ட கதையில் செய்நேர்த்தியும், சீரான கதையோட்டமும் அழகாய் வெளிப்படுத்தி இருக்கிறார் அறிமுக இயக்குநர் விக்ரமாதித்ய மோத்வனெ. அனுராக் கேஷ்யாப்பின் பட்டறையிருந்து வந்துள்ள இவர் மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்துகிறார்.

குறிப்பாக ரோஹன் ரயிலில் ஜாம்ஷெட்பூர் வந்திறங்கி வீடு சேர்ந்து அடுத்தநாள் காலையில் ஊர்ப்பெயரை காண்பிக்கிறார்.steel city என்பதை பார்வையாளர்கள் முன்னமே இனம் கண்டுவிடுவார்கள் என்ற நம்பிக்கையாக இருக்கலாம்.ரோஹனின் தந்தை காரில் எப்போதும் ஒரு பாதுகாப்புத் தலைக்கவசம்(safety Helmet - hard hat) வைத்திருப்பார்.ரோஹன் முதல்நாள் தனது தொழிற்சாலையில் வேலைக்கு பயிற்சி எடுக்க மேலாளருடன் அனுப்பும்போதும் ஹெல்மெட்டைக் கொடுத்து வாழ்த்தி அனுப்புவது என சிறுவிஷயங்களிலும் இயக்குநர் நல்ல கவனத்துடன் கையாண்டிருக்கிறார்.இது பாதுகாப்பு சார்ந்த தொழில்முனைப்பில் இருக்கும் என் கண்ணுக்குதான் தென்படுகிறதா என்பது வேறுவிஷயம்.

இலக்கியம் படித்தால் சோறு கிடைக்காது என்பது ரோஹனின் தந்தையின் கருத்து மட்டுமல்ல பெரும்பான்மையான இந்திய பெற்றோரின் கருத்து.இந்த பாதிப்பில்தான் ஏதோவொரு வகையில் இலக்கியத்தின்பால் ஈர்ப்பு கொண்ட ஆனால் வேறுதுறைப்பாடங்களை படித்த பெரும்பான்மையானோர் இணைய வலைப்பதிவர்களாக வலம்வருகிறார்களோ என்று ஏனோ ஐயங்கொள்ளத் தோன்றுகிறது.

3 இடியட் வணிகரீதியான கலவையாக உருப்பெற்றப்படம் என்பது என் கருத்து.அதுபோன்ற ஒரு கோட்பாட்டை இந்தபடம் எந்தவித வணிகரீதியிலான கலப்பின்றி தந்திருக்கிறது.கேன்ஸ் திரைப்பட விழாவிலும்,தோஹா திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்ட பெருமைக்குரியது இந்த படைப்பு.விடலைப் பருவத்தின் காட்சியமைப்புகளை நம்தமிழ் இயக்குநர்கள் கையாளும் விதமே தனி.சோகக்கதை அது. சமீபகால ஹிந்தி சினிமாக்களின் தரத்தைக் காணுகையில் தமிழ் சினிமா பயணம் எதைநோக்கி சென்று கொண்டிருக்கிறது என்கின்ற பயம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.மிஷ்கினின் நந்தலாலா பயம்தீர்க்க ஆதரவு தருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.2010 ல் வந்த இந்தியப்படங்களில் ஒரு முக்கிய இடத்தைப்பெறும் இப்படத்தை வாய்ப்பு கிடைத்தால் கட்டாயம் பாருங்கள்.

4 comments:

Philosophy Prabhakaran said...

கட்டாயம் பார்க்க முயல்கிறேன் தணிகை... உங்கள் விமர்சனம் அருமையாக இருக்கிறது உங்களது டெம்ப்ளேட்டை போலவே...

தணிகை செந்தில் said...

@philosophy prabhakan

உங்கள் வருகைக்கு நன்றி.டெம்ப்ளெட் பற்றின உங்கள் கருத்து எதிர்மறையா??

கானகம் said...

அன்பு செந்தில்,

கதையை முழுதும் சொல்லாமல் திரை விமர்சனத்தை சொல்லும் கலை கைவரப்பெற்றிருக்கிறீர்கள். மொழியின் ஓட்டமும் அருமை. வாக்கியங்களின் கோர்வையும் அருமை. இத்திரைப்படத்தை அவசியம் பார்க்கிறேன். உதான் என்றால் மேலெலும்புதல் என்ற ஒரு அர்த்தமும் உண்டு. தலைப்பு அந்த அர்த்தத்தில்தான் வைக்கப்பட்டிருக்குமோ?

மூர்த்தி லா ரோஸ் said...

யோவ் அறிவுக் கொழுந்து
புது பதிவு போடுய்யா
எத்தனை நாள் தான் அதே பக்கத்த பாக்கிறது

மூர்த்தி
லா ரோஸ்