Friday 24 December 2010

மன்மதன் அம்பு விமர்சனம்


சில நாட்களுக்கு முன் வளைகுடா இந்திய சாமான்யனுக்கு ஏற்புடைய வகையில் இந்தியாவில் பயணப்படும் உல்லாச சொகுசுக் கப்பல் எதாவது இருக்கிறதா என இணையத்தில் தேடி அலுத்த பின் மும்பை கோவா வழித்தடத்தில் இருப்பதாய் அறிந்து மகிழ்ந்தேன்.அடுத்த வருட விடுமுறையில் திட்டமிடும் நோக்கில் இருந்த மனநிலையை உறுதி கொள்ளச் செய்த விடயம் நேற்று பார்த்த மன்மதன் அம்பு திரைப்படம்.முன்பொரு பதிவில் நான் குறிப்பிட்டு எழுதிய மன்மதன் அம்பு சில எதிர்பார்ப்புகள் பதிவின் பின்புலத்தில் எந்திர வெம்மையில் கமல் கை சுட்டுக்கொள்ளும் வாய்ப்பு அதிகம் உள்ள படைப்போ இது என்ற உள்ளூர பயம் இருந்தது.ஆனால் நடந்தது வேறு.தருக்கப்பிழைகளை முடிந்தமட்டும் குறைத்து,நியாயம் கற்பித்து வெற்றிகரமாகவே அம்பெய்திருப்பதாக தோன்றுகிறது.

அதிகம் தொட்டிராத திரைக்கதையும்,காட்சியமைப்புகளும்,கவனமான பாத்திர தேர்வும் மற்றும் வசனக்கோர்வைகளுமாய் வெகு சுவாரஸ்யமாய் ஆரம்பம் முதல்கொண்டு ஈர்ப்புடன் மெருகேற்றி இருக்கிறார்கள்.கமலின் மாற்று கையாளுதலான நகைச்சுவைப் பிரிவில் இப்படத்தை முற்றிலுமாய் சேர்த்திட இயலாது கடைசி காட்சிகளைத் தவிர என்பது என் கோணத்துப் பார்வை.படம் முழுவதும் வழக்கமான ஆள்மாறாட்ட களிப்பினை ரசிகனுக்குத் தர முயலாமல் வேறு தளத்தினை அறிமுகம் செய்ததில் தனித்து தெரிவது சிறப்பம்சம்.

கதை- ஒரு பெரும் தொழிலதிப மாதவன் கோலோச்சும் நடிகை த்ரிஷாவின் மேலுள்ள காதலின் சந்தேகக் குறியீடுகளை ஆய்ந்திட உளவாளி கமலின் உதவி நாடிட மேற்கொண்டு ஒரளவு நம்பத்தன்மையுடன் நடந்தேறும் சூழ்நிலை சார்ந்த கோர்க்கப்பட்ட நடப்புகளே படம்.

கதாபாத்திரங்களும்,தேர்வும் அதற்கான  நியாயத்தைத் தெளிவுபடுத்துகின்றன.திரைத்துறையின் பின்னணியும்,மேல்தட்டு வர்க்கத்தினரின் கதைக்களனும் படத்தின் ஆடம்பரத்தன்மைக்கு இயல்பாய் அமைவது பொருத்தம்.கதையை த்ரிஷாவை மையப்படுத்தி நகர்த்தி கமலின் இருப்பை சிறிது மட்டுப்படுத்தியது போல் காட்டிருப்பது அவரின் மீதான விமர்சனங்களுக்கு செவிசாய்த்தது போன்ற எண்ணத்தை வெளிக்காட்டுகிறது.கமல் தன்னை முக்கிய பிம்பமாய் காண்பிக்காமல் கதைக்கேற்ப அளவாய் காட்டியிருப்பது இந்த கதைக்கு துறுத்தி நிற்காமல் பொருந்துகிறது.

வித்யாசமான மாற்று முயற்சி ஏதும் இல்லாமல் கமலின் வயதுக்கு பொருந்துகிறது அவர் ஏற்றிருக்கும் வேடம்.நன்றாக செய்திருக்கிறார் என்பது சச்சினின் 49 வது சதத்திற்கு ஒப்பீடு.மென்சோகம்,உளவு,விளக்கம்,இலக்கியம் போன்றவற்றோடும் சில வெகுஅருகாமையான முகக் காட்சியமைப்புகள் அவரின் கண்கள் பேசின விதம் கதைக்கு இயல்பாய் இருக்கிறது.

கதைநாயகி த்ரிஷாவை சங்கீதா பல இடங்களில் தாராளமாய் முந்துகிறார் அவரின் உடற்கூற்றமைப்பைப் போலவே.முக்கியமாய் அவருக்கான வசனங்கள் அவரின் மீதான ஈர்ப்பை உண்டாக்குகிறது.த்ரிஷாவும் நன்றாக நடிக்கக் கற்றுக்கொண்டு விட்டேன் என்பதை பல இடங்களில் உணர்த்துகிறார்.வழக்கமான குழந்தைத்தன உச்சரிப்பில்லாத நாயகியை காணமுடிகிறது.அடுத்த தளத்திற்கு த்ரிஷாவை கொண்டு சென்ற பெருமை இந்த படத்திற்கு கிடைக்கும்.ஒத்திகையுக்தி இதற்கு முக்கிய காரணமாய் இருக்கலாம்.

மாதவனும் பல இடங்களில் மற்றவர்களை முந்தியிருக்கப் பார்க்கிறார்.பல்வேறான உணர்வுகளை சர்வசாதாரணமாய் செய்து காட்டி கவர்ந்திடுகிறார்.மற்றவர்களில் ரமேஷ்,உஷா உதூப்,சங்கீதாவின் மகனாக வரும் சிறுவன்,இலங்கைத்தமிழரின் மனைவியாக வருபவர் கவனத்தை ஈர்க்கிறார்கள்.

கௌதம் மேனனின் ரிச்னெஸ் மற்றும் பேண்டஸி சாகசங்களை எளிதாய் புறந்தள்ள ரவிக்குமாருக்கு நிச்சயம் கமலின் கதையின் களம் வழி செய்திருக்கிறது ரஹ்மான் போன்ற பிம்பங்களின் உதவி இல்லாமலேயே.கமலின் சில ஆள்மாறாட்ட நகைச்சுவைப் படங்களில் நிகழ நேர்ந்த நாடகத்தன்மையை சாமர்த்தியமாய் சொகுசுக் கப்பல், ஐரோப்பிய தளங்களின் மூலம் இல்லாமல் செய்கிறார்.

கமலின் வசனங்கள் மேதாவிலாசத்தை வேண்டிய அளவோடு காண்பிக்கிறது.கவிதை வரிகளில் இருவரிகளை நீக்கி இருந்தால் நன்றாய் இருந்திருக்கும்,கதைக்கு ஒன்றும் அத்தனை அவசியமில்லாதது.நீலவானம் பாடல்யுத்தி வெகுவாய் கவர்ந்தது.மற்றபாடல்கள் கதையோட்டத்தோடு கலந்திருக்கிறது.ஆண்ட்ரியாவின் குரலில் who is d hero-ல் ஒரு வசீகரம் இருக்கிறது.சுரேஷ் கண்ணன் அதுபற்றிய ஒரு பதிவே போட்டிருக்கிறார் என்றால் பாருங்களேன்.ஒளிப்பதிவு- மனுஷ் நந்தன் ரவி.K.சந்திரனின் சீடராம்.குருவின் பெயருக்கு சிறப்பு செய்திருக்கிறார்.

குறைகளே இல்லையா என்றால், பாலுமகேந்திரா கையாளும் படங்களின் கதை போன்ற உணர்வினை தவிர்க்கமுடியவில்லை.ஆர்ப்பரிக்கச் செய்யும் சிறப்பான பாடல்கள்,ஆட்டங்கள் இல்லை.வியக்கச் செய்யும் பெரிய முனைப்பு ஏதும் இல்லை.இது ஒன்றும் பெரிய மைல்கல் முயற்சி இல்லை என்றாலும் அடுத்து எய்யப்போகும் மகா படைப்புக்கான ஒத்திகைக் களனே இந்த அம்பு என்றவகையில் feel good படமாய் இதயத்தை தொடுகிறது இந்த மன்மதன் அம்பு.

Saturday 6 November 2010

பறக்கத்துடிக்கும் விடலை எழுத்தாளனின் கதை

உதான் (Udaan)


சென்ற பதிவில் மேற்கோளிட்ட ஒரு நல்ல திரைப்படத்தின் பார்வையே இந்த பதிவு.உதான் ஹிந்தி திரைப்படம் பார்த்தபோது தமிழில் ஏன் இதுபோன்ற முயற்சிகள் வருவது மிகக் குறைவாக இருக்கிறது என்ற ஏக்கம் வருவதை தவிர்க்கமுடியவில்லை.ஹிந்தி படங்கள் என்றாலே ஷாருக்,சல்மான் போன்றோர் கிடார் மீட்டிக்கொண்டு ஒரு குறிப்பிட்ட சுரங்களிலேயே காதல்கீதங்களை காலத்திற்கும் பாடிக்கிட்டு இருப்பார்கள் என்ற எண்ணங்கள் மாறத் துவங்கி கொஞ்சம் நாட்களாகிவிட்டன.அதற்கான தார்மீகப் பொறுப்பை ஏற்று வந்துள்ள உதான் (Udaan) கட்டாயம் பார்க்கவேண்டிய நன்மதிப்புப் படங்களின் வரிசையில் மிக முக்கியமான ஒன்று என்பதை அழுத்தமாய் சொல்கிறது.

சிம்லாவில் உள்ள ஒரு தனித்தன்மையான விடுதிப் பாடசாலையில் படிக்கும் பதின்ம வயது நான்கு நண்பர்கள் சுவரேறிக் குதித்துச் சென்று வாலிபப்படத்தைப் பார்க்கப்போய் பிடிபட்டதால் விடுதியிலிருந்து வெளியேற்றப்படுகிறார்கள்.எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஜாம்ஷெட்பூரிலுள்ள தந்தையிடம் வந்துசேரும் ரோஹன் தனது இலக்கியம் கற்கும் விருப்புக்கும் தந்தையின் அதிகப்படியான இராணுவரீதியான கட்டுப்பாடுகளுக்கும் இடையே எதிர்கொள்ளும் எதார்த்த நிகழ்வுகளின் உணர்வுரீதியான,நேர்த்தியான கோர்வையே இந்த உதான். தன்னை சார் என்றழைக்கச் சொல்லும் அளவிற்கு விடுதிப்பாடசாலையை விட அதிக கட்டுப்பாடுகள் கொண்ட தந்தை, எட்டு வருட இடைவெளியில் பிரிந்து சென்றுவிட்ட இரண்டாம்தாரத்தின் மகன் என்னும் புதிய தம்பி உறவு என பாத்திரப்படைப்புகளின் புதுப்பரிமாண அறிமுகம்   கதைக்களனூடே பெரிய ஈர்ப்பை ஏற்படுத்தி விடுகிறது.

எழுத்தாளராகும் தன்விருப்பிற்கு பெரும் முட்டுக்கட்டை இட்டு தனது இரும்புத் தொழிலகத்தில் மதியம்வரை பகுதிநேர பணிக்கும்,பின் பொறியியல் கல்லூரியில் சென்று பயிலவும் ரோஹனை ஆட்படுத்துகிறார் தந்தை.தினமும் காலையில் கட்டாய மெது ஒட்டப்பயிற்சியும் தொடர்ந்து விரைவு ஓட்டப்பந்தயமுமாய் ரோஹனுக்கு ஆட்டம் காட்டுகிறார் தந்தை.ஒருமுறை நேரத்தில் கிளம்பாததால் பள்ளி செல்லும் ஆறு வயது அர்ஜூனையும்,ரோஹனையும் விட்டுவிட்டு காரை எடுத்துச் சென்றுவிடுகிறார்.போற்றிப்பாடும் இயல்பிற்கு முரணாக தந்தையின் சர்வாதிகாரம் படம்முழுக்க ரோஹனை மட்டுமல்லாமல் நம்மையும் நொறுக்குகிறது. பிடிக்காத பாடங்களுக்கும் அன்பை தவிர்த்த ராணுவத்தனமான கண்டிப்புடன் பேணுகிற தந்தைக்கும் நடுவே பறிபோய் கொண்டிருக்கும் இளவயது சுதந்திரத்தைத் திரும்ப பெற்றிடும் ரோஹனின் முயற்சி தான் முழுபடமும்.ஒரு தாய் அல்லது பெண்மணி இல்லாத குடும்பத்தின் சூழலை,பிள்ளைகளுக்கு ஏற்படுகின்ற பாதிப்பை நம்பகத்தன்மைக்கு மிக அருகில் நம்மை அழைத்துச்செல்கிறது இந்தப்படம்.

எட்டுவருடமாய் ஒருமுறையும் தன்னை வந்து பார்த்திராத ஆற்றாமையையும்,ஆறு வயதில் ஒரு தனக்கு ஒரு தம்பி இருப்பதை பதினேழாம் வயதில் தெரியவந்ததை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளும்போதும்,தன்னிடம் தோழமையுடன் ஊக்கமளிக்கும் சித்தப்பாவிடம் கூண்டுச்சிறையிலிருந்து விடுவிக்கக் கோரும்போதும் ரோஹனாக நடித்திருக்கும் ராஜத் பர்மெச்சா இயல்பாய் செய்திருக்கிறார்.தனது இலக்கியத்திறனையும்,நண்பர்களையும் நம்பி மூன்றாம்முறை மணம்புரிந்த சர்வாதிகார தந்தையை ஒரு குத்துவிட்டு பின்னர் ஆறுவயது தம்பியுடன் வீட்டைவிட்டு ரோஹன் வெளியேறுவதோடு முடிகின்ற படத்தில் அவர்களின் வாழ்க்கை என்னாகுமோ என்ற நமது பதட்டம் படத்தின் முக்கிய ஜீவன்,வெற்றி.

எடுத்துக் கொண்ட கதையில் செய்நேர்த்தியும், சீரான கதையோட்டமும் அழகாய் வெளிப்படுத்தி இருக்கிறார் அறிமுக இயக்குநர் விக்ரமாதித்ய மோத்வனெ. அனுராக் கேஷ்யாப்பின் பட்டறையிருந்து வந்துள்ள இவர் மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்துகிறார்.

குறிப்பாக ரோஹன் ரயிலில் ஜாம்ஷெட்பூர் வந்திறங்கி வீடு சேர்ந்து அடுத்தநாள் காலையில் ஊர்ப்பெயரை காண்பிக்கிறார்.steel city என்பதை பார்வையாளர்கள் முன்னமே இனம் கண்டுவிடுவார்கள் என்ற நம்பிக்கையாக இருக்கலாம்.ரோஹனின் தந்தை காரில் எப்போதும் ஒரு பாதுகாப்புத் தலைக்கவசம்(safety Helmet - hard hat) வைத்திருப்பார்.ரோஹன் முதல்நாள் தனது தொழிற்சாலையில் வேலைக்கு பயிற்சி எடுக்க மேலாளருடன் அனுப்பும்போதும் ஹெல்மெட்டைக் கொடுத்து வாழ்த்தி அனுப்புவது என சிறுவிஷயங்களிலும் இயக்குநர் நல்ல கவனத்துடன் கையாண்டிருக்கிறார்.இது பாதுகாப்பு சார்ந்த தொழில்முனைப்பில் இருக்கும் என் கண்ணுக்குதான் தென்படுகிறதா என்பது வேறுவிஷயம்.

இலக்கியம் படித்தால் சோறு கிடைக்காது என்பது ரோஹனின் தந்தையின் கருத்து மட்டுமல்ல பெரும்பான்மையான இந்திய பெற்றோரின் கருத்து.இந்த பாதிப்பில்தான் ஏதோவொரு வகையில் இலக்கியத்தின்பால் ஈர்ப்பு கொண்ட ஆனால் வேறுதுறைப்பாடங்களை படித்த பெரும்பான்மையானோர் இணைய வலைப்பதிவர்களாக வலம்வருகிறார்களோ என்று ஏனோ ஐயங்கொள்ளத் தோன்றுகிறது.

3 இடியட் வணிகரீதியான கலவையாக உருப்பெற்றப்படம் என்பது என் கருத்து.அதுபோன்ற ஒரு கோட்பாட்டை இந்தபடம் எந்தவித வணிகரீதியிலான கலப்பின்றி தந்திருக்கிறது.கேன்ஸ் திரைப்பட விழாவிலும்,தோஹா திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்ட பெருமைக்குரியது இந்த படைப்பு.விடலைப் பருவத்தின் காட்சியமைப்புகளை நம்தமிழ் இயக்குநர்கள் கையாளும் விதமே தனி.சோகக்கதை அது. சமீபகால ஹிந்தி சினிமாக்களின் தரத்தைக் காணுகையில் தமிழ் சினிமா பயணம் எதைநோக்கி சென்று கொண்டிருக்கிறது என்கின்ற பயம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.மிஷ்கினின் நந்தலாலா பயம்தீர்க்க ஆதரவு தருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.2010 ல் வந்த இந்தியப்படங்களில் ஒரு முக்கிய இடத்தைப்பெறும் இப்படத்தை வாய்ப்பு கிடைத்தால் கட்டாயம் பாருங்கள்.

Saturday 30 October 2010

தவறவிட்ட திரைப்பட விழா வாய்ப்பு

சென்னை ஃபில்ம் சேம்பரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சர்வதேச திரைப்பட விழா சமயத்தில் என் வாய்ப்பு பறிபோன கதை வேறுதளத்தைப் பற்றியது.இந்த தளம் இடம் என்ற அர்த்தத்திற்குரியது.சென்னையைப் பிரிந்து இருப்பதால் அங்கு நடைபெறும் விழாவில் கலந்து கொள்வது இயலாமையாகிப் போனது.மறதியும் சோம்பேறித்தனமும் குறுகிய வட்டமுமே இந்த வாய்ப்பைத் தவறவிடக் காரணம்.இந்த கட்டேற்றம் கத்தார் தோஹாவில் இன்றோடு நடந்துமுடிந்த சர்வதேசத் திரைப்பட விழாவைப்(Doha Tribeca Film Festival) பற்றிய மையம் கொண்டது.

இரண்டு மாதங்களுக்கு முன் ஒரு நண்பரின் வழக்கமாய் திருப்பிவிடும் சுபாவ இமெயில் மூலம் இதுபற்றி அறிந்தேன்.பிறகு அதன் அதிகாரபூர்வ இணையதளத்தில் விவரங்கள் தேடியதில் அவர்களுக்கு சேவைப்பணிக்கு விண்ணப்பிக்க ஆட்களும் தேவை என்பது தெரிந்தது.இதிலெல்லாம் கலந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் இதுவரை பெரியதாய் இல்லாமல் தான் இருந்தது.ஆனால் சில நண்பர்களின் பரிந்துரைகளினாலும்,சாரு நிவேதிதா,எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோர் என் மனத்தில் உண்டாக்கிய தாக்கத்தினாலும் சர்வதேசத் திரைப்படங்கள் என்னுள் ஒரு உந்துதலை உண்டாக்கி இருந்தது.

திரையிடப்போகும் படங்களின் பட்டியலை அப்போதைய சமயத்தில் பார்த்தபின் ஒரே அரபியத் திரையிடல்கள் வாசம் என்னை பயமுறுத்தியது.அதனால் விண்ணப்பிக்க தயங்கி பின்வாங்கிவிட்டேன்.விண்ணப்பித்து இருந்தாலும் கிடைத்திருக்குமா என்பது வேறு விஷயம்.விண்ணப்பித்த ஆயிரமவர்களில் ஒரு நூறுபேரை மட்டுமே தேர்வு செய்த்ததும்,அதில் பெரும்பான்மையானவர்கள் அரபிக் பேசுபவர்கள் என்பதும் காலம் கடந்தபின் வந்துசேர்ந்த புரிதல்.அதோடு இந்த விழாவைப் பற்றி மறந்துவிட்டேன்.

இன்றுதான் இவ்விழாவினைப் பற்றிய தொடர்விவரங்கள் கிடைக்க,வாய்ப்பு தவறவிட்டதன் உணர்வு உறுத்தியது.கென்ஸ் விழாவில் கலந்து கொண்ட பல சர்வதேசத் திரைப்படங்களும் கடைசிநேர வரிசையில் சேர்ந்து கொண்டன.அவற்றில் முக்கிய படங்களாய் என் புரிதலுக்கானவை:

பிரேவ் ஹார்ட், பேர்ல் ஹார்பர் படங்களின் திரைக்கதாசிரியர் ரேண்டல் வாலஸ்ஸின் “Secretariat"

கேன்ஸில் சிறந்த இயக்குநர் விருது பெற்ற ஜூலியன் ஸ்சென்பெலின் "Miral" - இதில் ப்ரைய்டா பிண்டோ ஸ்லம்டாக் மில்லினர் நாயகி நாயகியாக நடித்தது.

வேர்ல்ட் பனோரமா குழுவில் இடம்பெற்ற ஒரே இந்தியத் திரைப்படமான “Udaan” உதான் - விக்ரமாதித்ய மோத்வனெ இயக்கத்திலும், மற்றும் அனுராக் கேஸ்யாப்பின் திரைக்கதையிலும் வந்த படம்.

1945 க்கும் 1962 க்கும் இடைப்பட்ட காலங்களில் அல்ஜீரியாவில் நடந்த கொடும்கொலைகளில் தப்பித்து பிரான்ஸில் தஞ்சம் புகுந்த மூன்று சகோதரர்களின் கதையமைப்பைக் கொண்ட ''Outside the Law"

மற்றும் கென்ய கிராமத்தின் 84 வயது விவசாயியின் முதியோர் கல்வி ஆசை பற்றிய   "The First Grader" படங்கள்.

இந்த விழாவில் ராம்கோபால் வர்மாவின் ரக்த சரித்ராவும் சிறப்புத் திரையிடலாக திரையிடப்பட்டது.விழாவில் ஒருநாள் பேமிலி டேயாக அறிவித்து இலவசமாய் இரண்டு நல்லபடங்களையும் அழகான திறந்தவெளி அரங்கில் காண்பித்தார்கள் என்பது நண்பரின் மூலம் கடைசியாக வந்த தகவல்.மீரா நாயர்,ப்ரைய்டா பின்டோ,சல்மா ஹெயக் மற்றும் மல்லிகா ஷெராவத் ஆகியோரும் கலந்து கொண்டார்களாம்.இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் நான் தவறவிட்டதாய் சொன்ன வாய்ப்பு.அடுத்த வருடத்தில் வாய்ப்பு கிடைத்தால் தவறவிடக்கூடாது என்று எங்கோ எழுதின ஞாபகம்(இங்கே தான்.. வேற எங்கேயும் எழுதறதில்லை).தோஹா நண்பர்கள் கூட்டு சேரலாம்.அதுவரை என்ன பண்றது..இந்த படங்களை  சில பல உபயங்களின் மூலம் முடிந்தால் பார்த்துவிட்டு பதிவிட வேண்டியது தான்..

நன்றி: DTFF - http://www.dohafilminstitute.com/

செந்தில்குமார்.

Thursday 28 October 2010

மனுநீதி சோழனும் குஜராத்தும்

நாம் ஒரு கன்றுக்குட்டிக்காக தன் மகனையே கொல்லத்துணிந்த மனுநீதி சோழனைப் பற்றி படித்திருக்கிறோம்.அவரின் அரண்மனைக்கு வெளியே குறைதீர்ப்பு கவன ஈர்ப்பாக ஒரு பெரிய மணி கட்டப்பட்டு இருக்குமாம்,குறையை நேரடியாய் அரசனிடம் முறையிட ஏதுவாக இருக்க.இது இப்போதைய சூழலுக்கு,அரசு நிர்வாகத்திற்கு  மிகப்பழமையான விஷயமாக இருக்கலாம்.ஆனால் இதே கருத்துருவைக் கொண்டு இன்று குஜராத் மாநிலம் பெரும் சாதனைகளைப் பெற்றிருக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மை.

மக்களின் முறையீட்டுக்கு இலகுவாக அழைப்புமணியாக இன்று இணையத்தை ஏற்படுத்தித் தந்து அதன் மூலம் பொதுமக்களின் நேரடி குறைகளை ஒரு மாநிலத்தின் முதலமைச்சரே செவிசாய்த்து தீர்வுக்கு வழி செய்கிறார்.இதைத்தான் குஜராத்தில் 2003ஆம் ஆண்டில் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தும் துயர் துடைக்கும் கவன ஈர்ப்பு ([State Wide Attention on Grievances with Application of Technology (SWAGAT)] என்னும் திட்டத்தின் மூலம் இன்று நல்ல நிர்வாகத்திறனை எட்டியிருக்கிறார்கள்.

மக்கள் தங்களின் துயரை இணையதளத்தில் பதிவு செய்வதும்,குறிப்பிட்ட கால அவகாசத்தில் அதற்கான பொறுப்பதிகாரியின் விளக்கங்களுடன் மாதாமாதம் நான்காம் வியாழக்கிழமைகளில் முதலமைச்சர் பொதுமக்களை  தொலைத்தொடர் நேரடி  கலந்துரையாடலில்(வீடியோ கான்பரென்ஸ்)  தொடர்பு கொள்கிறார்.இதற்கு ஏதுவாய் எல்லா துறைகளின் அலுவலகங்களிலும்,மாவட்ட மற்றும் வட்டாட்சி அலுவலகங்களிலும் விரைவான broadband (அகலப்பட்டை-?) இணைப்பை ஏற்படுத்தித் தந்திருக்கிறார்கள்.முதலமைச்சரின் நேரடித் தலையீட்டால் அரசதிகாரிகளும் முனைப்போடு இருக்கவேண்டியது அவசியமாகிறது.

மக்களின் குரல் அரசாங்கத்தை எட்ட இணையத்தின் உதவியுடன் மாநிலத்தின் முதல்வர் செவிசாய்க்கும் திட்டம் மனுநீதி சோழனின் மணியோசை தான்.இந்த திட்டம் தான் குஜராத் மாநிலம் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்ற, ஐக்கிய நாடுகளின் பொது நல சேவை விருது வகையான ‘பொது நல சேவையில் பொறுப்புடனும், கவன ஈர்ப்புடனும் கூடிய தெளிவான முன்னேற்றம்’ என்னும் 2010-ற்கான விருதினை SWAGAT பெற வழிசெய்துள்ளது.இதுமட்டும் அல்லாமல் குஜராத் மாநிலம்   சென்ற ஆண்டிற்க்கான பொதுநல சேவை விருதும் தரமான குடிநீர் வழங்கல் ம்ற்றும் கழிவுநீர் நிர்வாகப் பிரிவில் பெற்றுள்ளது.

இதுபோன்ற உண்மைகள் நம்மையும் நம் மீடியாக்களையும் பெரிதாய் ஈர்ப்பதேயில்லை.இது மற்ற மாநிலங்களின் வளர்ச்சிக்கு ஒரு நல்ல முன்னுதாரணமாய் எனக்கு தோன்றுகிறது.மோடி பற்றி குறைகளைப் பேசியே பழக்கப்பட்டுப்போன மீடியா இதிலெல்லாம் ஆர்வம் காட்டுவதே இல்லை.சில சமயங்களில் சத்தம் போடாமலும்,பலசமயம் கூப்பாடுபோட்டும் எல்லா வகை முன்னேற்றங்களையும் தன்மாநிலத்திற்கே கொண்டு செல்வதில் மோடி குறியாகவே இருக்கிறார்.


குஜராத்தோடு ஒப்பிடுகையில் நம் தமிழகம் எங்கே இருக்கிறது?எப்போது நம் அரசு எந்திரம் விழித்துக்கொள்ளப்போகிறது?எப்போது நம் முதல்வர்கள் இதுபோன்ற ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை மேற்கொள்ளப் போகிறார்கள்? எப்போது நமீதா,குஷ்பு கலந்துகொள்ளும் விழாக்களுக்கெல்லாம் நேரம் ஒதுக்காமல் நல்ல திட்டங்களை கொண்டுவரப்போகிறார்கள் என்ற பலகேள்விகள் வந்து மனத்தில் அயர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

மனுநீதி சோழனும் மோடியும் என்று முதலில் தலைப்பிட்டு ஏனோ மாற்றிவிட்டேன்...

கொசுறு நற்செய்தி:அடுத்த பத்தாண்டுகளில் பெரும்வளர்ச்சியை எட்டப்போகும் மூன்று இந்தியநகரங்களில் சென்னையும் (மற்ற இருநகரங்கள் அகமதாபாத் மற்றும் பெங்களூரு) ஒன்றாக அமெரிக்க இதழ் Forbes நடத்திய ஆய்வில் தெரிவிக்கிறது.இந்த ஆண்டில் ஒரு லட்சம் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்துள்ள நகரமாய் சென்னைக்கு இந்த மதிப்பு கிடைத்திருக்கிறது.பெருமையாய் இருக்கிறது.

Monday 25 October 2010

மன்மதன் அம்பு -- சில எதிர்பார்ப்புகள்

எந்திர பரபரப்பு ஒரு வழியாக அடங்கி முடிகின்ற நேரத்தில் அடுத்த கட்டத்திற்கு தமிழ் சினிமாவை கொண்டு செல்ல முயல்கிற முக்கியமானவர்களில் ஒருவரான கமலின் அடுத்த படம் மன்மதன் அம்பு வண்டி கட்டிக்கிட்டு இருக்கிறது.அடுத்த பரபரப்புக்கு தீனி போட ஆளும் ரெடி.வேற யாரு,கலாநிதி மாறனுக்கு போட்டி ஆளு உதயநிதி ஸ்டாலின் தான்.ஒரு கலைஞரின் கிளைக்குடும்பங்கள் ஒட்டுமொத்த தமிழ்சினிமாவையும் ஒரேடியா குத்தகைக்கு எடுத்துட்ட மாதிரி தெரியுது.கமல்,ரஜினி படங்களுக்கே இந்த நிலைன்னா அடித்த வரிசையில் உள்ளவர்கள் நிலை என்னாவோ.?


கலைஞர் டிவியில இதுவரை சன் டிவி கணக்கா ஆடம்பர ஆர்பாட்டம் இல்லாத மாதிரி தெரிந்தாலும் எந்திரன் கடுப்புல கைவரிசை காட்டுவாங்க.கலைஞர் டிவியில் வயசாயிப்போன பிரியதர்சினியின் மொக்கையான கேள்விகளுடன் ரவிக்குமாரும்,உதயநிதியும்,த்ரிஷா,மாதவனும் சில வளர்ந்த மற்றும் வளரும் இயக்குனர்களும் கமலுடன் கலந்துரையாடுவார்கள் என கட்டாயம் எதிர்பார்க்கலாம்.பாலாபிஷேகம் எல்லாம் காட்டமாட்டாங்கன்னு நம்புவோமாக..

உலகமெங்கும் 1000 தியேட்டர்களிலும்,தமிழ்,தெலுங்கு,ஹிந்தியிலும், வெளியிடப்போறதா பரபரப்பா பேசிக்கிறாங்க.சிங்கப்பூரிலோ,லண்டனிலோ அல்லது மானாட மயிலாட நடத்திய அபுதாபியிலோ(எவ்ளோ நாள் தான் துபாயே சொல்றது.,) பிரமாண்டமாய் இசை வெளியீட்டு விழா நடக்கும்.முக்கியமா அதுக்கு பயணப்பட்டதை கலைஞர் டிவியில போட்டு காசாக்க முனைப்பா இருப்பாங்க.DSP - தேவிஸ்ரீ பிரசாத் ஒரே ஆட்டம் பாட்டமாய் முக்கியமாய் ஒரு நடிகையுடன் ஆட்டம் போட்டுட்டு அதகளம் பண்ணுவார்.மானாட மயிலாட கோஷ்டியினர் இசை நிகழ்ச்சியில் கமலின் பாடல்களுக்கு ஆட்டம் போடுவார்கள்.

சௌந்தர்யா,ஐஸ்வர்யா கணக்கா ஷ்ருதியும்,அக்ஸ்ராவும்,கவுதமியும் கமலுடன் பயணப்பட்டு இருப்பார்கள்.கலைஞர் கருணாநிதி சென்னையில் இருந்தபடியே ரிமோட் கண்ட்ரோல் மூலம் இசைவெளியிடுவார்.ஒரு வாழ்த்துச்செய்தியும் அனுப்புவார்,அதை உதயநிதி பெருமையாய் வாசித்துக் காட்டுவார்.கமலின் அடுத்தபடத்தில் பங்கேற்கப் போகிறவர்கள் கட்டாயம் கலந்து கொள்வார்கள்.


படமெடுத்த சொகுசுக்கப்பலில் நடந்த சுவாரஸ்ய நடப்புகளை படம் காட்டியும்,விளக்கியும் சொல்வார்கள்.கமலின் ஆஸ்தான நடிகர்கள் படத்தில் முக்கிய பங்களிப்பார்கள்.எல்லா தமிழக நிதிகளைப் போல உதயநிதியும்  நம் நிதியை காலிபண்ண முடிந்தவரை பிரயதனப்படுவார் பல்வேறு விளம்பர யுக்திகள் மூலம்.கோவைசரளா போல இதில் சங்கீதாவிற்கு கமலுக்கு ஜோடியாகிற வாய்ப்பு கிடைத்திருக்கலாம்.

எல்லா சேனல்களும் பதிவர்களும் ரவுண்டு கட்டுவார்கள்.சாரு வழக்கம் போல கமலுக்கு இதெல்லாம் தேவையா என்பார்.ஞானி பாராட்டக்கூடும் அவர் மகனும் இதில் ஒரு பங்கேற்பாளி(ஒளிப்பதிவாளர்) என்பதால்.

இதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும் இதென்ன பத்துவருட கனவுப்படமோ அல்லது தமிழ் சினிமாவின் மைல்கல்லோ ஒன்னும் இல்லையே நாம்  பெரிதாய் எதிர்பார்க்க..வழக்கமான கமலின் ஹாஸ்யத்தைத் தான்.நகைச்சுவை கமலுக்கும் ரவிக்குமாருக்கும் நன்றாகவே வரும் என்பதால் நம்மை சிரிக்க வைத்தால் சரி.

Wednesday 20 October 2010

என் மழலையின் முதல் கவிதை

கவிதைகள் எழுதும் பெரிய முனைப்பு எதுவும் இல்லாததால் அதுபற்றி மண்டையை உசுப்பவில்லை.சில சமயங்களில் கவிதைகள் நாம் எதிர்பார்த்திரா வகைகளில் நிகழ்ந்துவிடுகின்றன.சின்னவயசில் கவிதை எனும் பெயரில் கிறுக்கியதுண்டு.அதை விட முக்கியமாய் அவை நன்றாக இருப்பதாய் நினைத்து பாதுகாப்பாய் எழுதியும் வைத்ததுண்டு.

எ.கா.:       பாடம் நடத்திடும் குருவை சில
                   பதர்கள் அழைப்பதோ அறுவை

இது அப்பட்டமான ஒரு நகலாகக்கூட இருக்கலாம்.பத்தாம் வகுப்பு வாக்கில் கிறுக்கியதாய் நினைவு.ஆனால் அவைகள் முக்கிய நண்பர்கள் தளத்தில் எள்ளி நகையாடி கேலி பேசப்பட்டதால் அதோடு பரணில் ஏறியது.அதன்பின் சில பல நல்ல கவிதைகள் மேலோட்டமாயும் நுண்மையாயும் வாசித்த அனுபவம் உண்டு.சில நறுக்கென்றும் பல மொக்கையாயும் இருக்கும்.நீளம் காரணமாய் முழுதும் படிக்க இயலாமல் போகும்.தமிழில் கவிதை எழுதும் கவிகள் அதிகம் என்பது உண்மையென்றாலும் அதில் எத்தனை உயிரோட்டமாய் இருக்கின்றன என்பதே தெளிவான நிதர்சனம்.சில உண்மையில் முழுதாய் புரிவதில்லை.ஒருவேளை புரிந்துவிட்டால் அவை நல்ல கவிதை இல்லையோ அல்லது என் புரிதல் நிலை அவ்வளவு தானோ என்னவோ.புரியாத சமயத்தில் அதற்கான விளக்கம் அறிதலை நோக்கி நண்பர்களிடத்தில் கேள்வி எழுப்ப நினைத்தாலும் ஏதோ ஒன்று தடுத்துவிடும்.

பள்ளிப்பருவத்தில் தமிழ் மன்றத்தின் கட்டாயத்தால் எழுதிப் பழக வேண்டிய நிலை.அவை அந்நேரங்களில் தமிழாசிரியரின் நகைப்பிற்கும் சகமாணவர்களின் பாராட்டுக்கும் கூட ( ரொம்ப முக்கியம்..) ஆட்பட நேர்ந்ததுண்டு.ஒரு நண்பன் எப்போதும் சட்டைப்பை குறிப்பேட்டில் மனதில் உதித்த தருணத்தில் குறிப்பெழுதி கக்கிவிடுவதை கவனித்திருக்கிறேன்.

திரு.சுஜாதா அவர்களின் சுட்டிக்காட்டலின் மூலம் பல ஹைக்கூக்களும்,நல்ல கவிதைகளின் வாசிப்பிற்கும் அறிமுகம் கிடைத்தது.பிடித்தவர்களின் சுட்டிக்காட்டல் பிடிக்கும் என்பதில் வியப்பேதுமில்லை அல்லவா?

சென்னையில் எண்ணெய் நிறுவனத்தில் பணிபுரிந்தபோது கவிதை என்ற பெயரில் பாதுகாப்பு (அவ்வளவு தானா உங்கள் லட்சணம் என்ற முணுமுணுப்பு எங்கிருந்தோ..)குறித்த சில வரிகள் எழுதி இரண்டாம் பரிசும் கிடைத்திருக்கிறது.இன்னபிற காரணங்களால் நல்ல கவிதை அத்தனை சுலபமானதில்லை என்ற முடிவுக்கு வந்து வெகுநாளாகிவிட்டது.அதனால் அதுபற்றிய முனைப்பு இல்லாமல் போய்விட்டது,வாசிப்போடு சரி.

வலைதளத்தில் பதிவிட வந்ததால் கவிதை எழுதும் எண்ணமும் இதுவரை இல்லை.ஆனால் எதேட்சையாய் என் பிள்ளைகளிடம் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சாதாரண தருணத்தில் என் நாலரை வயது மகன் என்னை எதிர்நோக்கி எழுப்பிய கேள்வியே ஒரு கவிதையாய் பட்டது எனக்கு,உங்களுக்குமா.? என்பதை கடைசியில் உள்ள கவிதையை (என் கணிப்பு) படித்துவிட்டு சொல்லுங்கள்.

நிலாவையும்,மழையையும் முன்னிறுத்தி காலம் காலமாய் பல்லாயிரக்கணக்கான கவிதைகள் நம்மிடையே வலம் வந்தாலும் சலிப்பேற்றுவதில்லை.மழையோ அதற்கான அறிகுறிக்கோ இயற்கையே எந்த பெரிய முனைப்பை காட்டாத வளைகுடா மணற்பரப்பில் அதிசயமாய் சிறுதூறலுடன் மென்மையான வானவில்லோடு காட்சியளித்த கவிமயமான தருணத்தில் என் வீட்டு மழலையின் பார்வையில் மனத்தில் ஜனித்ததை நான் பதியும் இதுவும் மழையைப் பற்றியதே.முழுதாய் எந்த பூச்சும் இல்லாமல் தந்திருக்கிறேன்.

மழை  ஏன் வந்திருக்கிறது தெரியுமா
அழுக்காய் இருக்கிற நமது காரை கழுவிவிட..      


செந்தில்

Wednesday 13 October 2010

எங்கே விளையாட்டு பசங்க.?

எப்ப பார்த்தாலும் விளையாட்டு தான்.படிக்கணும்கிற எண்ணமெல்லாம் கொஞ்சம் கூட இல்லை,நிக்கியை பாரு,தாரகேஷைப் பாரு (இன்னும் பல குழந்தைகளின் பெயர் சொல்லி.,பெயர்களை மறந்துவிட்டேன்) எப்படி படிக்கறாங்க என்ற இசைப்பாட்டு சமையல் அறையில் இருந்து என் வீட்டு மழலைகளை வந்து அடைந்தது.சில சமயங்களில் என்னை நோக்கியும்
வருவதுண்டு.நாங்களும் படிப்போம்ல எப்பவாவது (முதியோர்க்கானது அல்ல).


சிறுவயதில் தோன்றும் விளையாட்டுத்தனங்களையும் அதன் மீதுள்ள ஈர்ப்பையும் பருவம் தாண்டியும் கொண்டு செல்லும் முனைப்பும்,வாய்ப்பும் வெகுசிலருக்குத் தான் வாய்க்கிறது.ஒரு கோடை விடுமுறையில் ஒரு பகல்பொழுது முழுதும் விளையாடித் தீர்த்து வீடு வந்து சேர்ந்தபொழுது வூடு கட்டி என் அம்மா அடித்தது ஏனோ இப்போது நினைவில் வருகிறது.இந்த தலைமுறையிலும் அதே நிகழ்ந்திடவும் வாய்ப்புள்ளது.விளையாட்டை முழுநேர ஈடுபாடாய் கொண்டோர் இந்தியாவில் வெகுசிலர் மட்டுமே.மேல்தட்டு வர்க்கம் தான் அதிலும் ஆதிக்கம் செலுத்துகிறது.மத்திய மற்றும் அடித்தட்டு மக்களுக்கு இன்னும் எட்டா பழமே.கிரிக்கெட்டும் அதன் புகழும்,பணமும்  தான் அதற்கான முன்னேற்ப்பாட்டு மனநிலையை கொண்டு வந்தது எனலாம்.இதிலும் மனமாற்றம் மட்டுமே,செயல்படுத்துதல் இன்னும் சரிவர ஆரம்பிக்கவே இல்லை.


நீ நன்றாக படித்தால் உனக்கு அது சோறு போடும்,விளையாட்டு என்ன சோறா போடும்-இது பலத்தரப்பட்ட பெற்றோரின் அன்றுமுதல் இன்றுவரையான நிலையான வாதம்.உண்மை தான் ஆனால் உண்மையான திறமையும் விளையாட்டின்பால் ஈர்ப்பும் கொண்டோரையும் இந்த வாதம் விழுங்கிவிடுகிறது என்பது தான் வேதனையான விஷயம்.அப்படியும் வந்தோர்க்கு வாய்ப்பும்,முறையான பயிற்சியும் உதவியும் கிடைக்கவிடாமல் செய்வது வேறென்னவாக இருக்கமுடியும் பாழாய்ப்ப்போன சாக்கடை அரசியல் தான்.




சமீபத்தில் காமென்வெல்த் போட்டிகளை மையமாக்கி என்.டி.டி.வியில் ஒரு கலந்துரையாடலைப் பார்த்தேன்.நிகழ்ச்சியின் சூடான விவாதத்தின் மையத்தில் நிகழ்ச்சித்தொகுப்பாளர் எதிர்பாராத ஒரு கேள்விக்கணையை தொடுத்தார்.நடுத்தர மற்றும் மேல்தர வகுப்பு வர்க்கத்தினரை போன்றோர் இருந்த பங்கேற்பாளர்களில் விளையாட்டை முழுநேரப் பணியாய் கொண்டவர் எவரேனும் உண்டா? என்று.நீங்கள் என்ன யூகிக்கிறீர்கள்.? உண்மை தான், கூச்சல் எல்லாம் அடங்கி அமைதி தான் நிலவியது.ஒருத்தரும் இல்லை.இதுதான் நம்நிலை.


அதற்கு நம்மக்கள் தான் காரணம் என்று ஒதுக்கிவிட முடியாது.110 கோடி மக்களில் பெரும் யுவ,யுவதிகளைக் கொண்டிருக்கும் சமூகமாயிருந்தாலும் அதன் சக்தி விரயமாகிக் கொண்டிருப்பதற்கு உதவிக்கான ஸ்பான்சர்களும்,மீடியாவும் சாக்கடையுடன் போட்டியிடுகிறது என்பதே என் வாதம்.கிரிக்கெட்டும் சானியாவும் தவிர எதுவும் சரிவர தென்படவில்லை ஸ்பான்சர்களுக்கும்,மீடியாவுக்கும்.காமென்வெல்த் ஊழலிலும், விளையாட்டு கிராமத்திலுள்ள குளறுபடிக்கும்,எயிட்ஸ் பாதுகாப்புக்கவச அடைப்புக்கும் கொடுத்த முக்கியத்துவத்தை விளையாட்டை இந்தியாவின் சார்பில் முன்னிறுத்தும் செயல்பாட்டில் மீடியா முனைப்பை  காட்டத்தவறியது.


முதன்முறையாக இந்த வளர்ந்துவரும் தேசம் நடத்தும் ஒரு பெரும்போட்டியை டிடி ஸ்போர்ட்ஸ் மற்றும் டிடி தவிர யாரும் பெரிதாய் எடுத்துக் கொள்ளவில்லை.இவ்வளவு செலவு செய்து இதெல்லாம் நமக்குத் தேவையா என்பதும் ஊழல் தலைவிரிக்கோலமும் சரியென்று ஒப்புக்கொள்ள முடியாததும்,விவாதத்திற்கும் உரியவை.நம்நாடு நடத்தும் சிறப்பைப் பெற்ற இந்த நிகழ்வை நல்லுணர்வோடும்,நம்பிக்கையோடும் அடித்தட்டு மக்களுக்கு இப்போது கொண்டு சேர்க்காமல் எப்போது கொண்டு சேர்ப்போம்.? ஸ்பான்சர்களும் கிரிக்கெட்டிற்கு போல பெரிய வரிசையெல்லாம் இல்லை என்பதை காமென்வெல்த்தின் அதிகாரப்பூர்வ தளத்தை பார்வையிட்டால் புரியும்.


இவற்றையெல்லாம் தாண்டி நாம் பதக்கப்பட்டியலில் இரண்டாவது அல்லது மூன்றாம் இடத்திற்கு தாவிக்கொண்டு இருப்பது உவப்பாய் இருக்கிறது.ஆஸ்திரேலியாவை தங்கங்களில் முந்தாவிட்டாலும் 2-0 என கிரிக்கெட்டில் வெண்தோய்ப்பாக்கி (whitewash-ன் தமிழாக்கம் சரியா?? பின்னூட்டவும் தவறெனில்) இருப்பதும் உவப்பே..சோனியாவும் ராகுலும் போட்டியைக் காண வந்திருந்ததில் அரசியல் சார்பு  விடுத்து ஊக்குவித்ததும் நல்லதே..இந்த மகிழ்வில் விளையாட்டில் நம்மக்களுக்கு ஊக்கமும் கிடைக்கும் என்கிற நம்பிக்கையில்,நினைப்பில்..நான்.

Tuesday 12 October 2010

மனுஷ்ய புத்திரன் கவிதையும் விஜயகாந்தும்

சமீபத்தில் சாருவின் வலைதளத்தில் மனுஷ்யபுத்திரனின் கவிதை ஒன்று வாசிக்கக் கிடைத்தது..கவிதை நன்றாகவே இருப்பதாய் மனதில் கீற்றிற்று.அந்த கவிதை இங்கே:


மன்னிப்பு என்பது

மன்னிப்பு கேட்கும்படி
அப்புவுக்கு நான் கற்பித்த நாளில்
மன்னிப்பு என்றால்
என்னவென்று கேட்கிறான்

ஒரு குழந்தைக்குப்
புரியவைக்க முடியுமா

மன்னிப்பு என்பது
ஒரு குற்றத்திற்கு வழங்கப்படும்
அதிகபட்ச தண்டனையென்று

அது வலிமையுள்ளவர்கள்
வலிமையற்றவர்கள்மேல் செலுத்தும்
அதிகாரம் என்று

வலிமையற்றவர்கள்
தமது இயலாமைக்குத்
தாமே வழங்கிக் கொள்ளும்
சமாதானமென்று

கடவுள்களின் ஓய்வு நேரப்
பொழுது போக்கு என்று

பந்தயத்தில் தோற்ற குதிரையை
உயிரோடுவிடுவது என்று

மரண தண்டனைக் குற்றவாளிக்குத்
தூக்கு மேடையில் வழங்கப்படும்
கருணை என்று

ஒரு முடிவற்ற துன்பத்திற்கு
நம்மைப் பழக்கப்படுத்திக்கொள்வது என்று

எளிய தேவைகளுக்காக செய்துகொள்ளும்
சமூக உடன்படிக்கை என்று

கன்னத்தில் அறைந்தவர்களுக்கு
மறுகன்னத்தைக் காட்டுவது என்று

படுக்கையறையில்
மண்டியிடுதல் என்று

ஒரு இந்தியன் கண்டுபிடித்த
வினோத தத்துவம் என்று

பிரார்த்தனைகளின்
மையப் பொருள் என்று

ஒரு புரட்சியாளனால்
உதாசீனப்படுத்தப்படுவது என்று

இன்னொரு சந்தர்ப்பம்
அளிக்கும் முயற்சி என்று

இன்னொரு பக்கத்தைப்
புரிந்துகொள்வது என்று

தண்டனையை
ஒத்தி வைப்பது என்று

நண்பர்களுக்குத் தரும்
சிறந்த பரிசு என்று

ஒரு துரோகத்தை
அறியாததுபோல் நடிப்பது என்று

எந்தத் தவறும் செய்யாத போதும்கூட
கேட்கப்படுவது என்று

பெரும்பாலான சமயங்களில்
மறுக்கப்படுவது என்று

ஒருவரை அச்சத்திலிருந்து
விடுவிப்பது என்று

ஒருவரை நிரந்தரமாக
அடிமைப்படுத்துவது என்று

மறதியின்
இன்னொரு பெயர் என்று

அடிக்கடி பயன்படுத்தப்படும்
ஒரு அர்த்தமற்ற சொல் என்று

மிகவும் எளிய
ஒரு தந்திரமென்று

ஒரு போதைப்பொருள்
என்று

மன்னிக்கவே முடியாத ஒன்றை
மன்னிப்பது போல் பாவனை செய்வது என்று

ஒரு குழந்தைக்குப்
புரியவைக்க முடியுமா

மன்னிப்பு என்பது
இறுதியில்
ஒரு கண்ணீர்த்துளி
மட்டுமே என்று..”


கவிதையின் பல வரிகள் இறுதியின் கண்ணீர்த்துளிக்கு வழிவிட்டன.ஆழ்ந்த கவிதை ஞானமில்லாத எனக்கு இதன் கட்டுமானம் சிறிது நீளமாய் போனதில் கொஞ்சம் வருத்தம்.சுருங்க,நறுக்க(!!!) படித்தே பழக்கப்பட்டுப் போன எனக்கு ஏனோ விஜயகாந்த் இந்த இடத்தில் நினைவுத்திரையில் சிவந்த கண்களுடன் நீண்ட வசனம் பேசிய பிரம்மை.

தமிழில் விஜயகாந்த்துக்கு பிடிக்காத
ஒற்றை வார்த்தை என்று

இதையும் சேர்த்திருக்கலாம் என தோன்றிற்று.விஜயகாந்த்தை பகடி செய்யவே இதை பதிகிறேன்,மனுஷ்யபுத்திரனை அல்ல என்பதை தெளிவாக்கிட விழைகிறேன்.காட்சிப்பிழையாய் தவறுதலாய் புரிதல் நேர்ந்தாலும் கவிதை(தலைப்பு) எழுதிய அவர், தரவும் செய்வார் என்ற நம்பிக்கையில்...

Wednesday 6 October 2010

உலாவலின் இன்பம்

மடிக்கணினியில் மூழ்கிருந்த ஒரு வழக்கமான மதிய பொழுதில் பள்ளி விட்டு வந்த நான்காம் வகுப்பு படிக்கும் என் மகள் மிக சாதாரணமாய் கேட்ட ஒரு கேள்வி என்னை துணுக்குறச் செய்தது.அப்பா, நாம் எப்போ ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுலா போவோம்.? இதுவே என்னை துணுக்குறச் செய்த கேள்வி.வளைகுடா நாடொன்றில் வசித்தாலும் பரந்துவிரியா இந்திய மனம் என்பதாலோ என்னவோ அந்த வியப்பு.அவளின் வகுப்புத்தோழி இந்த கோடை விடுமுறையில் அங்கு சென்றுவந்ததாய் சொன்னாள்.

நம்மில் பெரும்பகுதியினர் சுற்றுலா செல்வதற்கு பெரியதாய் நாட்டமும் முயற்சியும் மேற்கொள்வதில்லை.சிறு பயண தூரத்திலும் ஒரு குழுவாய், நண்பர்களுடன் சென்று வருவதில் கி்டைக்கும் மகிழ்வும் சுகமே.


சமீபத்திய எங்களின் விடுமுறையின் போது விஜயவாடாவில் பணியிலிருக்கும் என் மனைவியின் சகோதரனைக் காணச்சென்றோம்.நான்குநாட்கள் அங்கு கழிக்க எத்தனித்திருந்தோம்.விஜயவாடாவில் என்ன பெரியதாய் இருந்துவிடப்போகிறது சுற்றிப்பார்க்க என்ற அவதானிப்பில் நான் இருந்தேன்.அங்கு வழக்கமான சுற்றுலாத்தளங்களான கனகதுர்கா அம்மன் கோயில்,மங்களகிரியை சுற்றிவிட்டு நகரத்தைவிட்டு 16 கி.மீ.தொலைவில் இருந்த உண்டவள்ளி குகைக்கோவிலுக்கு சென்றோம்.

 அங்கு எனக்கு பல ஆச்சர்யங்கள் காத்திருந்தது.இந்த நான்காம் நூற்றாண்டு பழைமையான அனந்த பத்மநாபஸ்வாமி குகைக்கோயிலை இந்திய தொல்பொருள் அகழ்வாராய்ச்சி நிறுவனம் பராமரித்து வருகிறது.கூட்டம் அதிகமொன்றும் இல்லாத அந்த பகல்பொழுதில் ஜெர்மெனியை சேர்ந்த அந்நியதேசத்துப் பெண் தான் என்னை ஆச்சரியம் கொள்ளச்செய்தாள்.எங்கள் குழுவுக்கு பின்னால் அவர்கள் வந்து கொண்டிருந்தார்கள்.சிறிதுநேர குகைக்கோயிலின் கண்டுகளிப்பிற்கு பிறகு மெதுவாய் கொஞ்சம் தயக்கத்துடனே(எப்பவுமே அப்படித்தான்..,) அவளிடம் பேச்சு கொடுத்தேன்.சிறிது கலந்துரையாடலுக்கு பின் பல தகவல்களை பரிமாற்றம் செய்தாள்.ஜெர்மெனியில் இருந்து 13 வயது மகள் மற்றும் 8 வயது மகனுடன் தனியாக இந்தியா சுற்றிப் பார்க்க வந்திருக்கிறாள்.அதுவும் ஐந்து வாரங்கள் இந்தியா முழுதும் சுற்றும் திட்டமிடலுடன்.


வட இந்தியாவில் இரண்டு வாரங்கள் பல இடங்களில் சுற்றிவிட்டு இங்கு வந்திருப்பதாக சொன்னாள்.அவளின் கணவனுக்கு விடுப்பு கிடைக்காததால் கடைசி இரண்டு வாரங்கள் அவர்களுடன் தமிழக மற்றும் கேரள பயணத்தில் சேர்ந்து கொள்வதாக திட்டமாம்.இதெல்லாம் நாமே செய்ய மாட்டோம்,எங்கே நமது தேசத்துப்பெண்கள் தனியாய் பிள்ளைகளுடன்.மலைப்பாக இருந்தது.விஜயவாடாவில் எங்கோ ஒரு மூலையில் இருந்த இந்த இடத்தை அவர்கள் அணுகியது எப்படி என்ற வியப்பும் என்னை உலுக்கியது. இணையத்தில் இடங்களைப் பற்றி பல தகவல்களுடன் மிகுந்த முன்னேற்பாட்டுடன் வந்திருந்தது தெரிந்தது.மீதமுள்ள இந்திய கண்டுகளிப்பு இனிதாய் அமைய  அவர்களை வாழ்த்தி விட்டு நானும் இனி இதுபோன்ற முனைப்பை செயலாக்க வேண்டும் என்ற நினைப்பை நிலைநிறுத்தினேன் என்னுள்.

 
குகைக்கோயிலில்  ஒய்யாரமாய் சாய்ந்து படுத்தபடி எழுந்தருளியுள்ள அனந்த பத்மநாபஸ்வாமி சிலை ஒரே கல்லில் செதுக்கியது

ஆஸ்திரேலியா,லண்டன்,ஐரோப்பிய நாடுகளுக்கு போகாவிட்டாலும் பாரததேசத்தின் எல்லைகளையாவது அளந்துவிட முடிவுசெய்தேன்.
மணற்குன்றுகளுக்கு மத்தியிலும் ஒரு இனிமையான உலாவலை ஒரு நண்பரின் பெற்றோர் இங்கு வந்திருந்தபோது முழுதாய் உணரமுடிந்தது.

எந்திரன் போன்ற படங்களுக்கு செலவு (சமகாலத்தின் பதிவு..,)செய்யும் 500 ரூபாயில் கூட ஒரு இனிய உலாவலை உங்கள் அருகாமையிலேயே காணலாம்.சென்னைக்கு மிக அருகில் கூட பல சுற்றுலாத்தளங்கள் இன்னும் பெரிதாய் சீண்டப்படாமல் உள்ளன.இதுபற்றிய ஒரு நல்ல இணையதளம் சமீபத்தில் காணக்கிடைத்தது.உங்கள் பார்வைக்கும்

http://www.chennaitrekkers.org/.

இனிய உலாவிற்கு வாழ்த்துக்களுடன்..


Sunday 3 October 2010

எந்திரன் - என் பார்வையில்

எந்திரன்



ஒரு ரோபோவுக்கு ஆறாம் அறிவை புகுத்திய பின் அதற்கு காதல் வந்தால் என்ன ஆகும் என்பதே பிரமாண்ட எந்திரனின் ஒன்லைன்.Sci-Fi னில் ஷங்கர் புகுந்து விளையாடப்போகிறார் என்று எதிர்பார்த்தால்.,ரோபோவுக்கு காதல் முளைக்கவிட்டதோடு தன்வேலை முடிந்துவிட்டதாய் நினைத்து இயக்குனர் தன் யோசிப்பை நிறுத்திக் கொண்டு விட்டது மிகப் பெரிய சோகம்.மிகுந்த ஆர்ப்பாட்டங்களினூடே வந்து எங்களின் பேராசையை மீண்டும் நிராசையாக்கிய பெருமைக்குரியவராகிறார் ஷங்கர்.பல கோடி செலவு செய்தும் உலக அரங்கில் தமிழ் சினிமாவை முன்னிறுத்தும் முயற்சியில் மிகுந்த தோல்வியும் ஏமாற்றமுமே மிஞ்சுகிறது.

நிறைகளாய் :  ரோபோவை வைத்து வரிசையாய் மெல்லிய நகைச்சுவை உணர்வுகளுடன் கூடிய காட்சிகளைக் கோர்த்து பிரமாண்டமாய் பெரிய பூந்தோரணங்களை கட்டி அலங்கரித்து இருக்கிறார்கள்.பாடல்கள் வழக்கத்தை விட அழகாய் இருக்கிறது,முக்கியமாய் அரிமா அரிமா,காதல் அணுக்கள்.சிட்டி ரோபோ முதல் பாதியில் நம்மை ஈர்த்து பின்பாதியில் ரொம்ப வசீகரித்து கட்டிப்போடுகிறார்.கடைசி அரைமணி நேர கிராபிக்ஸ் கலக்கல் தமிழ் சினிமாவில் புதுசு.ஐஸ்வர்யாராய் கதைக்கு அழகூட்டியும் மிகத்தேவையாயும் இருக்கிறார்.ரோபோவுக்கே காதல் வருமென்றால் சும்மாவா.,சாபுசிரிலின் கைவண்ணம்,ரத்னவேலின் அசர வைக்கும் கேமராப் பார்வை முத்தாய்ப்பாய் ஷங்கர் மற்றும் ரஜினியின் உழைப்பு.
வழக்கமாய் கமல்,விக்ரம்,சூர்யா ஆகியோர் ஏற்றுச் செய்யும் மெனக்கெடலை முதன்முறையாய் இந்தமுறை ரஜினி ஏற்று மிக உழைத்திருக்கிறார்,உண்மையிலேயே.25 கோடியின் பலனோ என்னவோ..ரஹ்மான் இன்னும் கொஞ்சம் நன்றாக செய்திருக்கலாம்.

10 வருட கனவு, இரண்டரை வருட உழைப்பைத் தாங்கி வரும் படத்திற்கு நிறைய மெனக்கெடல்களை ஷங்கர் செய்திருக்க வேண்டும்.ஆனால் புதியதாய் பெரியதாய்(ஷங்கர் என்பதால்) நாம் கேட்டறியாத,புரிந்து கொள்ள சிறிது கடினமான அல்லது செயற்கை அறிவுசார் விஷயங்கள் பெரிதாய் ஒன்றும் இல்லாதது வருத்தம்.அறிவியல் புனைக்கதை பாமர ரசிகனைச் சேர நினைத்ததின் விளைவோ என்னவோ.மைல்கல்லாக நினைத்தது கால்புள்ளியாய் கரைந்திருக்கிறது.படம் முழுதும் எதைஎதையோ உடைத்துக் கொண்டே இருக்கிறார்கள்,LCD TV, ஹெலிகாப்டர்,கார்,ரயில் இருக்கை,கண்ணாடி முதற்கொண்டு.அழிப்பில் காட்டிய ரிச்னெஸ் முனைப்பை சுய கதை ஆக்கத்திலும் கொஞ்சம் காட்டியிருக்கலாம் என்ற ஆதங்கம் உண்டாவதை தவிர்க்கமுடியவில்லை.

செக்குமாடாய் திரும்ப திரும்ப காதலையே சுற்றிச்சுற்றி வரும் தமிழ்சினிமாவின் அவலநிலை ரோபோவை வைத்து அறிவியல் புனைக்கதையும் களனும் செய்ய அமைந்தாலும் விடாது போலும்.இதனாலேயே தமிழ்சினிமாவின் உள்வட்டம் எவ்வளவு சுருங்கியிருக்கிறது என்பது அப்பட்டமாய் தெரிகிறது.

இரண்டு வருட உழைப்பை தாங்கி சமீபத்தில் வெளிவந்த தசாவதாரம்,கந்தசாமி,ராவணன் மற்றும் எந்திரன் அனைத்திலும் அடித்தளக் கதையும் படமும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாமல் அம்புலிமாமா,விட்டாலாச்சாரியா படக்கதைகளின் பாதிப்பை மட்டுமே பதித்துவிட்டு சென்றன.சுயமாய் புதியகதையும் களனும் இல்லாததே காரணம்.ஓர் ஒப்பீட்டில் தசாவதாரமும் எந்திரனும் சில விஷயங்களில் ஒரே கோட்டில் நிற்கின்றன.அம்புலிமாமா கதை ரவிக்குமாரின் பார்வையிலும் ஷங்கரின் பார்வையிலும் இரு வேறு படங்களாய் மற்றும் கமலின் பத்து அவதாரம்,ரஜினியின் மூன்றுமுகம்.அதிலும் விஞ்ஞானி வசீகரன் வசீகரமாய் இல்லை.ஒட்டுமீசை பல இடங்களில் பல்லிலிக்கிறது.இவ்வளவு செலவு செய்தவர்கள் ஒப்பனையில் கவனித்திருக்கலாம்.


ரெட்டிப்,டைம் ஆப் இந்தியா போன்றவையும் ரஜினியை மழலைகளை நாம் பாராட்டி,சீராட்டி ஊக்குவிப்பது போல விமர்சனம் எழுதியது என்னை இந்த முதல் பதிவை எழுதத்தூண்டியது.உலகளவில் வியாபாரம் செய்யும் படத்திற்கு தரத்தினை கூட்ட சிறிதேனும் முயன்றிருக்கலாம்.ஆதித்யா,சுட்டி சேனல்களுக்கு பால் வார்த்த நன்றியையும்,என் குழந்தைகளை மகிழ்வித்த நன்றியையும் மட்டுமே உரித்தாக்குகிறேன்.இந்த சமயத்தில்  தமிழ் சினிமாவை உலக அரங்கில் முன்னிறுத்தக்கூடிய இயக்குனராய்  பாலாவை தைரியமாக பாராட்ட என்மனம் விழைகிறது.

எந்திரன் -- தசாவதாரத்தின் கால் புள்ளி(டாட்.- வசீயின் பாணியில்)
                   மற்றும் உலக அரங்கில் தமிழ்சினிமாவை முன்னிறுத்தும் முயற்சியில் தோல்வி...